#BREAKING: கோடநாடு வழக்கு – சசிகலாவிடம் மீண்டும் நாளை விசாரணை!
கோடநாடு வழக்கு தொடர்பாக சசிகலாவிடம் மீண்டும் நாளை காலை 10 மணிக்கு விசாரணை தொடங்கும் என தகவல்.
கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு தொடர்பாக இன்று சென்னை தி.நகரில் உள்ள வீட்டில் சசிகலாவிடம் மேற்கு மண்டல ஐ.ஜி.சுதாகர் தலைமையிலான தனிப்படை விசாரணை மேற்கொண்டது. கோடநாடு பங்களாவில் என்னென்ன இருந்தன என்பதை நன்கு அறிந்தவர் சசிகலா என்பதன் அடிப்படையிலும், பங்களா மேலாளர் நடராஜன் வாக்கு மூலத்தின் அடிப்படையிலும் அவரிடம் நீலகிரி எஸ்பி ஆஷிஷ் ராவத், ஏடிஎஸ்பி கிருஷ்ண மூர்த்தி மற்றும் பெண் போலீசார் உள்ளிட்டோர் இன்று காலை 11 மணி முதல் உணவு இடைவெளிக்கு பிறகும் தொடர்ந்து நடைபெற்ற விசாரணை தற்போது நிறைவு பெற்றது.
சசிகலாவிடம் சுமார் 6 மணிநேரமாக நடைபெற்ற விசாரணையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு பங்களாவில் எவ்வளவு நகை, பணம் இருந்தது உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டதாகவும், 100கும் மேற்பட்ட கேள்விகளுக்கு சசிகலா பதில் கூறியதாகவும் தகவல் வெளியாகியிருந்தது. இந்த நிலையில், கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக சசிகலாவிடம் இன்று விசாரணை நிறைவு பெற்ற நிலையில், மீண்டும் நாளையும் விசாரணை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சசிகலாவிடம் மீண்டும் நாளை காலை 10 மணிக்கு விசாரணை தொடங்கும் என தகவல் கூறப்படுகிறது.
2017-ல் நடந்த கோடநாடு கொலை, கொள்ளை பற்றி இதுவரை 217 பேரை காவல்துறை விசாரித்துள்ளது. இன்று நடைபெற்ற 6 மணிநேர விசாரணையின் போது சசிகலா முழு ஒத்துழைப்பு அளித்ததாக காவல்துறை தரப்பில் தெரிவித்தாக கூறப்படுகிறது.