#BREAKING: வந்தது தீர்ப்பு.. 10 குற்றவாளிகளுக்கும் ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
சேலம் ஓமலூரை சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் கடந்த 2015-ஆம் ஆண்டு ஜூன் 23ம் தேதி தனது காதலியுடன் திருச்செங்கோடு கோவிலுக்குச் சென்ற கோகுல்ராஜ் நாமக்கல் மாவட்டம் கிழக்கு தொட்டிபாளையம் ரயில்வே தண்டவாளத்தில் சடலமாக மீட்கப்பட்டார். இந்த வழக்கில் சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலைக் கவுண்டர் பேரவையின் நிறுவனர் யுவராஜ் முதன்மைக் குற்றவாளியாகக் கருதப்பட்டு, தேடப்பட்டு வந்த நிலையில், 2015-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 11-ஆம் தேதி நாமக்கல் மாவட்ட சிபிசிஐடி போலீசில் யுவராஜ் சரணடைந்தார். அவரோடு சேர்த்து 17 பேர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டனர்.
முதலில் இந்த வழக்கை திருச்செங்கோடு காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். திருச்செங்கோடு டிஎஸ்பி விஷ்ணுபிரியா இது தொடர்பாக விசாரித்து ஒரு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென உத்தரவிட்டதை தொடர்ந்து, அவர் சில நாட்களிலேயே மனஅழுத்தம் காரணமாக தற்கொலை செய்துகொண்டதாக கூறப்பட்டது. இதன் பின்னர் வழக்கு விசாரணை கடந்த 2015 செப்டம்பர் 19-ஆம் தேதி சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட 17 பேரில் சந்திரசேகரன், ஜோதிமணி ஆகிய இருவர் இறந்துவிட்ட நிலையில், மீதமுள்ள 15 பேர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது.
இந்த வழக்கின் விசாரணை நாமக்கல் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், கடந்த 2019ஆம் ஆண்டு மே மாதம் இந்த வழக்கு மதுரை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. கடந்த 2019 மே 5 முதல் மதுரை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், 1318 பக்க குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டு, கோகுல்ராஜ் கொலை வழக்கு தொடர்பாக 106 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பான இறுதி விசாரணை பிப்.9ல் நிறைவுபெற்ற நிலையில், கோகுல்ராஜ் ஆணவப் படுகொலை வழக்கில் 10 பேர் குற்றவாளிகள் என மதுரை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் கடந்த 5-ம் தேதி தீர்ப்பு வழங்கியிருந்தது. அதன்படி, யுவராஜ், அருண், குமார், சங்கர், அருள் வசந்தம், செல்வகுமார், தங்கதுரை (யுவராஜின் சகோதரர்), சதீஷ்குமார், ரகு என்ற ஸ்ரீதர், ரஞ்சித் ஆகிய 10 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கப்பட்டது. சிறையில் அடைக்கப்பட்டிருந்த செல்வராஜ், சந்திரசேகர், பிரபு, ஸ்ரீதர், சுரேஷ் ஆகிய 5 பேர் விடுதலை செய்யப்படுவதாகவும் நீதிபதி தெரிவித்தார்.
கோகுல்ராஜ் கொலை வழக்கில் 10 பேர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்டவர்களுக்கான தண்டனை குறித்த விவரங்கள் இன்று அறிவிக்கப்படும் என்று நீதிமன்றம் தெரிவித்திருந்தது. தண்டனை தொடர்பாக இரு தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், இன்று பிற்பகல் தண்டனை குறித்த விவரங்கள் அறிவிக்கப்படும் என கூறப்பட்டது. கோகுல்ராஜ் கொலை வழக்கு குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என வாதிட்டோம் என அரசு தரப்பு வழக்கறிஞர் பவானி பா.மோகன் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், கோகுல்ராஜ் கொலை வழக்கில் 10 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை வழங்கி மதுரை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதில், முதலாவது குற்றவாளி யுவராஜ்-க்கு 3 ஆயுள் சிறை தண்டனை, சாகும் வரை சிறையில் இருக்க வேண்டும் என்றும் 2வது குற்றவாளியான யுவராஜின் ஓட்டுநர் அருணுக்கு 3 ஆயுள் தண்டனையும் விதித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குமார், சதிஸ்குமார், ரகு, ரஞ்சித், செல்வராஜ் ஆகிய ஐவருக்கும் 2 ஆயுள் தண்டனை, பிரபு, கிரிதருக்கு ஆயுள் தண்டனையுடன் 5 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து ரூ.5,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் மற்றொரு குற்றவாளியான சந்திரசேகரனுக்கு ஒரு ஆயுள் தண்டனை வழங்கி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனிடையே, வேறு சமூகத்தை சேர்ந்த பெண்ணை காதலித்ததால் கோகுல்ராஜ் 2015-ஆம் ஆண்டு கடத்தி கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.