#BREAKING : முதல்வரை பாராட்டாவிட்டாலும் பரவாயில்லை, மைக் கிடைத்தது என்பதற்காக அவதூறாக பேச வேண்டாம் – உயர்நீதிமன்ற மதுரை கிளை
முதல்வரின் பணியை பாராட்ட விட்டாலும் பரவாயில்லை. மைக் கிடைத்தது என்பதற்காக அவதூறாக பேசுவதை ஏற்றுக் கொள்ள முடியாது.
முன்னாள் முதல்வர் கருணாநிதி, முதல்வர் மு.க.ஸ்டாலினை அவதூறாக பேசி யூ டியூபர் சாட்டை துரைமுருகன் வீடியோ வெளியிட்டிருந்தார். இதனால், அவர் கைது செய்யப்பட்ட நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பதாக அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.
இதனையடுத்து, யூ டியூபர் சாட்டை துரைமுருகனுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய கோரி, மதுரை உயர்நீதிமன்ற மதுரை கிளையில், அரசு தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி புகழேந்தி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் எவ்வளவு பணிபுரிய முடியுமோ, அதையும் தாண்டி பணியாற்றிவருகிறார்.
முதல்வரின் பணியை பாராட்ட விட்டாலும் பரவாயில்லை. மைக் கிடைத்தது என்பதற்காக அவதூறாக பேசுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. தமிழ்நாடு அரசு மீது என்ன குற்றம் கண்டீர்கள்? நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட உறுதிமொழியை மீறி சாட்டை துரைமுருகன் ஒரு வார்த்தை பேசி இருந்தாலும் அவரது ஜாமீன் ரத்து செய்யப்படும் என தெரிவித்துள்ளார். மேலும், சாட்டை துரைமுருகன் என்ன பேசினார் என்பதை எழுத்துபூர்வமாக அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.