#Breaking: உட்கட்சி தேர்தல் – டிசம்பர் வரை அவகாசம் கேட்கும் அதிமுக!
உட்கட்சி தேர்தலை நடத்த டிசம்பர் வரை அதிமுக அவகாசம் கேட்டுள்ளது என்று நீதிமன்றத்தில் இந்திய தேர்தல் ஆணையம் விளக்கம்.
அதிமுக பொதுச்செயலாளராக இருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு உட்கட்சி தேர்தல் நடத்தப்படவில்லை. அதற்கு மாறாக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய பதவிகள் உருவாக்கப்பட்டு, இரட்டை தலைமை அடிப்படையில் கட்சி நடத்தப்படுகிறது.
எனவே, இதற்கு தடை விதிக்க வேண்டும், உட்கட்சி தேர்தலை நடத்தி பொதுச்செயலாளர் என்ற அங்கீகாரத்தில் ஒருவரை தேர்தெடுக்க வேண்டும். இந்த நடைமுறையை அதிமுக பின்பற்றாததால் அதன் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையத்திடம் திண்டுக்கல்லை சேர்ந்த சூரியமூர்த்தி என்பவர் புகார் அளித்திருந்தார்.
இதனைத்தொடர்ந்து, இந்திய தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தும் அதிமுகவில் உட்கட்சி தேர்தல் நடத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் சூரியமூர்த்தி வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதி ஆர்.மகாதேவன் தலைமையிலான அமர்வில் விசாணைக்கு வந்தபோது, உட்கட்சி தேர்தலை நடத்த தயாராக இருக்கிறோம்.
ஆனால், தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக தொண்டர்களையும், கட்சி நிர்வாகிகளையும் ஒருங்கிணைப்பது சிரமமாக இருக்கிறது. எனவே, கொரோனா தாக்கம் குறைந்த பிறகு உட்கட்சி தேர்தலை நடத்த திட்டமிட்டு இருப்பதாகவும், அதற்கு டிசம்பர் வரை கால அவகாசம் தேவைப்படுவதாகவும், அதிமுக விளக்கம் அளித்திருப்பதாக இந்திய தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தில் விளக்கமளித்துள்ளது.
மேலும், இந்த வழக்கில் அதிமுகாவையும் எதிர் மனுதாரராக சேர்க்க நீதிபதி ஆர்.மகா தேவன் உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.