#Breaking:சென்னை ஐஐடி மாணவி பாலியல் வழக்கு -பேராசிரியர்கள் முன்ஜாமீன் மனு;இயக்குநருக்கு நோட்டீஸ்!
கடந்த 2017-ஆம் ஆண்டு சென்னை ஐஐடியில் மேற்குவங்கத்தை சார்ந்த தலித் மாணவி தன்னுடன் பயின்ற ஆராய்ச்சி மாணவர்கள் பாலியல் வன்கொடுமை செய்ததாக மயிலாப்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார்.
அந்த புகாரின் அடைப்படையில் 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.இந்த வழக்கில் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டப்பட்டது.இதனால்,8 பேரை கைது செய்ய போலீசார் தனிப்படை அமைக்கப்பட்டு ஒரு தனிப்படை மேற்குவங்கம் சென்று சென்னை ஐஐடி முன்னாள் ஆராய்ச்சி மாணவர் கிங்சோ தெப்சர்மாவை கொல்கத்தாவில் கைது செய்தனர்.கிங்சோ ஏற்கனவே நீதிமன்றத்தில் முன்ஜாமின் பெற்றிருந்ததால் கொல்கத்தாவில் கைது செய்யப்பட்ட கிங்சோ விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில்,மேற்கு வங்க மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் சென்னை ஐஐடி இயக்குநருக்கு தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையத்தால் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.மேலும்,இவ்வழக்கில், இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து 15 நாளில் சென்னை காவல் ஆணையர்,மாவட்ட ஆட்சியர் பதில் தர உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனிடையே,இவ்வழக்கில் முன்ஜாமீன் கோரி சென்னை ஐஐடி பேராசிரியர்கள் ஜி.எடமன பிரசாத்,ரமேஷ் எல்.கர்தாசின் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.