#BREAKING: வீடு கட்டும் திட்டம்., ரூ.1,805 கோடி ஒதுக்கீடு – முதல்வர் அறிவிப்பு.!
பிரதமரின் வீட்டு வசதி திட்டத்திற்கு தமிழக அரசு சார்பில் ரூ.1,805.48 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக தமிழக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
பிரதமரின் வீடு கட்டும் திட்டத்திற்காக தமிழக அரசால் கூடுதலாக ரூ.1,805.48 கோடி ஒதுக்கீடு செய்வதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் (ஊரகம்) கீழ் வீடு கட்ட தொகையை உயர்த்தி வழங்கி முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
ரூ.1,805.48 கோடி ஒதுக்கீட்டால் சுமார் 2.50 லட்சம் பயனாளிகள் பயன்பெறுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வீடு கட்டுவதற்கு அரசின் திட்டங்கள் மூலம் ரூ.2.75 வரை பெறலாம். வீடுகளில் மேற்கூரை அமைக்க வழங்கப்பட்டு வந்த ரூ.50,000-ஐ உயர்த்தி ரூ.1.20 லட்சமாக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த புதிய அறிவிப்பால் ஒவ்வொரு வீட்டிற்கும் அலகு தொகை ரூ.1.70 லட்சத்தில் இருந்து ரூ.2.40 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், ரூ.2.40 லட்சத்துடன் 100 நாள் வேலை திட்ட நிதி ரூ.23,040, கழிப்பறை கட்டும் நிதி ரூ.12,000 ஆகியவைகளை பெறலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், கட்டுமான பொருட்கள் விலையேற்றம் மற்றும் கொரோனா காலத்தில் வாழ்வாதாரம் பாதிப்பால் தொகை உயர்த்தப்பட்டுள்ளது என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதனிடையே, பொங்கல் பரிசு ரூ.2,500 அறிவித்த நிலையில், வீடு கட்டும் திட்டத்தில் கூடுதல் நிதியை ஒதுக்கியது தமிழக அரசு.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
திரு எடப்பாடி K. பழனிசாமி அவர்களின் அறிக்கை – 22.12.2020 pic.twitter.com/b0i49p4yJY— DIPR TN (@TNGOVDIPR) December 22, 2020