#BREAKING: ஓசூர், நாகர்கோவில் – திமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்கள் வெற்றி!
நாகர்கோவில் மாநகராட்சியின் துணை மேயர் பதவிக்கு திமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் மேரி பிரின்சி வெற்றி பெற்றுள்ளார். திமுகவின் அதிகாரபூர்வ வேட்பாளர் மேரி பிரின்சி 28 வாக்குகளும், போட்டி வேட்பாளர் ராமகிருஷ்ணன் 24 வாக்குகளும் பெற்றனர். இதில் 4 வாக்குகள் வித்தியாசத்தில் திமுகவின் வேட்பாளர் மேரி பிரின்சி வெற்றி பெற்றுள்ளார்.
மாநகராட்சி மேயர், துணை மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர் மற்றும் துணை தலைவர் ஆகிய பதவிகளுக்கு இன்று மறைமுகத் தேர்தல் தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் நிலையில், பெரும்பாலான இடங்களில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்று பதவியேற்று வருகின்றனர்.
21 மாநகராட்சிகளும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வெற்றி பெற்றுள்ள நிலையில், நாகர்கோவில் மாநகராட்சி துணை மேயராக திமுகவைச் சேர்ந்த மேரி பிரின்சி தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே, நாகர்கோவில் மாநகராட்சி மேயர் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட வழக்கறிஞர் மகேஷ் வெற்றி பெற்றார். நாகர்கோவிலில் திமுக, பாஜக இடையே நடந்த பலப்பரீட்சையில் திமுகவின் மகேஷ் வெற்றி பெற்று மேயராக பொறுப்பேற்றார்.
இதுபோன்று ஓசூர் மாநகராட்சியின் துணை மேயர் பதவிக்கான தேர்தலில் திமுக வேட்பாளர் ஆனந்தைய்யா வெற்றி பெற்றுள்ளார். 45 வாக்குகளின் திமுகவின் ஆனந்தைய்யாவுக்கு 25 வாக்குகளும், அதிமுகவின் ஜெயபிரகாஷ்-க்கு 19 வாக்குகளும் கிடைத்தன. ஏற்கனவே, ஓசூர் மாநகராட்சியில் மேயர் பதவிக்கான தேர்தலில் திமுக, அதிமுக இடையே போட்டி நிலவி வந்த நிலையில், திமுக வேட்பாளரே வெற்றி பெற்றார். அதன்படி, ஓசூர் மாநகராட்சி மேயர் தேர்தலில் திமுக வேட்பாளர் சத்யா வெற்றி பெற்றிருந்தார்.