#BREAKING: இவர்களுக்கு அகவிலைப்படி வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு!
போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு நவம்பர் முதல் உயர்த்தப்பட்ட அகவிலைப்படியை வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு.
அரசு போக்குவரத்து கழகத்தில் ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு நவம்பர் 1 முதல் உயர்த்தப்பட்ட அகவிலைப்படியை வழங்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அகவிலைப்படி வழங்கியது குறித்து நவம்பர் 25-ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசு, போக்குவரத்து கழக ஓய்வூதிய நிதி அறக்கட்டளைக்கு நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.
போக்குவரத்து கழகத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றவர்களுக்கும் அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நான்கு முறை தமிழக அரசு அகவிலைப்படியை உயர்த்திய பிறகும் ஓய்வுபெற்ற ஓய்வூதியதாரர்களுக்கும், அதேபோல் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கும் அகவிலைப்படி உயர்வை வழங்கவில்லை என்று ஓய்வூதியதாரர்கள் தரப்பில் வழக்கு தொடுக்கப்பட்டது.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு தரப்பில், கூறுகையில் போக்குவரத்து கழகத்தில் ஊழியர்கள் அதிகளவில் இருக்கிறார்கள். இதனால் தான் அகவிலைப்படி உயர்வு உடனடியாக வழங்க முடியவில்லை. போக்குவரத்து துறைக்கு மட்டுமே ரூ.81 கோடி தேவைப்படுகிறது. நிதி நெருக்கடி காரணமாக வழங்க முடியவில்லை என தெரிவிக்கப்பட்டது. நிதி நெருக்கடி இருக்கும்போது எவ்வாறு அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
எனவே, போக்குவரத்துறையில் இருக்கக்கூடிய ஓய்வூதியதாரர்களுக்கும், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கும் அகவிலைப்படி உயர்வை வரும் நவம்பர் 1 முதல் வழங்க வேண்டும் என்றும் அகவிலைப்படி வழங்கியது தொடர்பான அறிக்கையை நவம்பர் 25-ஆம் தேதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.