#BREAKING: தமிழகம் முழுவதும் குரூப் 2 தேர்வு தொடங்கியது!
தமிழ்நாடு முழுவதும் TNPSC குரூப் 2 / 2A தேர்வுகள் 4,012 தேர்வு மையங்களில் தொடங்கியுள்ளன.
தமிழகத்தில் 5529 காலிப்பணியிடங்களுக்கான ஒருங்கிணைந்த குடிமை பணி தேர்வுகள் தொகுதி இரண்டு Group 2 / 2A தேர்வுக்கு ஆண் தேர்வர்கள் 4,96,247 பேரும், பெண் தேர்வர்கள் 6,81,089 பேரும் என மொத்தம் 11.78 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ள நிலையில், தேர்வுக்கான நுழைவுச்சீட்டுகளை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சமீபத்தில் வெளியிட்டிருந்தது. அதன்படி இன்று குரூப் 2 தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் என TNPSC தலைவர் பாலசந்திரன் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், தமிழ்நாடு முழுவதும் TNPSC குரூப் 2 / 2A தேர்வுகள் 4,012 தேர்வு மையங்களில் தொடங்கியுள்ளன. தமிழகம் முழுவதும் tnpscgroup2 தேர்வுகள் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இன்று நடைபெறுகிறது. இளைஞர்கள், கர்ப்பிணி பெண்கள், தாய்மார்கள் என பலதரப்பட்டோரும் தேர்வு எழுத ஆர்வமாக வந்துள்ளனர்.அதன்படி, 5,529 காலிப்பணியிடங்களுக்கு 6.82 லட்சம் பெண்கள் உளப்பட மொத்தம் 11.78 லட்சம் பேர் குருப் 2 தேர்வு எழுதுகின்றனர்.
தமிழக முழுவதும் 323 பறக்கும்படை, 6,400 ஆய்வு குழு, 4,012 வீடியோ குழு அமைத்து தீவிர கண்காணிப்போடு தேர்வு நடைபெறுகிறது. 12.30 மணிக்கு தேர்வு முடிந்தாலும், 12.45 மணிக்கு பிறகே தேர்வர்கள் வெளியே வர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இன்று நடைபெறும் குரூப் 2, 2ஏ தேர்வுகளுக்கு முகக்கவசம் அணிவது கட்டாயம் என்றும் முகக்கவசம் அணிந்து வருவோருக்கு மட்டுமே தேர்வு மையங்களுக்குள் அனுமதி வழங்கப்படும் எனவும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்திருந்தது
மேலும், தேர்வு எழுதும் மாணவர்கள் தேர்வறையில் எப்போதும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என்றும்,அதிகாரிகள் சரிபார்க்கும் போது மட்டும் முகக்கவசத்தை அகற்றி முகத்தை காட்ட வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.அதே சமயம்,தேர்வு எழுத வருவோர் ஸ்மார்ட் வாட்சிகளை அணிந்து வருவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.