#Breaking:பெரும் சோகம்…வைகை ஆற்றில் பக்தர்கள் இருவர் பலி;உதவி எண் அறிவிப்பு!

Default Image

உலகப்புகழ் பெற்ற கள்ளழகர் மதுரை வைகையாற்றில் இறங்கும் நிகழ்வு இன்று காலை கோலாகலமாக நடைபெற்றது.கொரோனா காரணமாக இரண்டு ஆண்டுகளாக நடைபெறாத நிலையில்,வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்வு இன்று லட்சக்கணக்கான பக்தர்கள் சூழ கோலாகலமாக நடைபெற்றது.

அதன்படி,பச்சைப்பட்டு உடுத்தி தங்கக்குதிரை வாகனத்தில் கள்ளழகர் பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்து வந்து வைகை ஆற்றின் நடுவே அறநிலையத்துறை அமைந்திருந்த மண்டகப்படியில் கம்பீரமாக கள்ளழகர் எழுந்தருளினார்.இதனை காண வந்திருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் வைகை ஆற்றில் இறங்கி தண்ணீரை பீய்ச்சி அடித்து ஆடி,பாடி மகிழ்ந்தனர்.

இந்நிலையில்,கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கிய போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி இரண்டு பக்தர்கள் உயிரிழந்துள்ளனர்.ஒரு பெண் உட்பட இரண்டு பேர் உயிரிழந்துள்ள நிலையில் அவர்களின் உடல்கள் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அசம்பாவிதம் ஏற்படக் கூடாது என்பதற்காக இன்று வைகை ஆற்றில் பக்தர்கள் இறங்க மாவட்ட ஆட்சியர் தடை விதித்திருந்தார். ஆனால்,அதனை மீறி ஏராளமானோர் ஆற்றில் இறங்கிய நிலையில், தற்போது கூட்ட நெரிசலில் சிக்கி இருவர் உயிரிழந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும்,கூட்ட நெரிசலில் சிக்கி 10 பேர் காயமடைந்துள்ள நிலையில் அவர்களும் அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.அவர்களை வணிக வரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி அவர்கள் நேரில் சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனைத் தொடர்ந்து,நெரிசலில் சிக்கி காயமடைந்தவர்களின் விவரங்களை அறிய 9498042434 என்ற என்னை தொடர்பு கொள்ளுமாறு மதுரை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.மேலும்,கூட்ட நெரிசலில் சிக்கி யாரேனும் காணாமல் போயிருந்தாலும் தகவல் தெரிவிக்குமாறு மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்