#BREAKING: சிறுமி டான்யா டிஸ்சார்ஜ்…படிப்பு செலவை அரசே ஏற்கும் – அமைச்சர் நாசர்
அரியவகை முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட சிறுமி டான்யா மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ்.
அரியவகை முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட சிறுமி டான்யா, தண்டலம் தனியார் மருத்துவமனையிலிருந்து இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். மருத்துவமனைக்கு சென்று சிறுமியை சந்தித்த பின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர் நாசர், முகச்சிதைவு அறுவை சிகிச்சை செய்துகொண்ட சிறுமி டான்யாவின் படிப்பு செலவை அரசே ஏற்கும் என அறிவித்தார். சிறுமி டான்யா குடும்பத்துக்கு இலவச வீடு வழங்க பரிசீலினை செய்யப்பட்டு வருகிறது.
சிறுமிக்கு அறுவை சிகிச்சை செய்ய ரூ.15 லட்சம் செலவானது. அதை முழுவதுமாக அரசே ஏற்கும். முதலமைச்சர் முக ஸ்டாலின் உத்தரவை அடுத்து சிறுமிக்கு தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஆகஸ்ட் 23ல் சுமார் 9 மணிநேரம் அறுவை சிகிச்சை நடைபெற்றது. இந்த நிலையில், இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட சிறுமி டான்யாவை அமைச்சர் நாசர், ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் பூங்கொத்து அளித்து வீட்டுக்கு பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.
இதனிடையே சிறுமி டான்யா கூறுகையில், இனி என்னை யாரும் ஒதுக்கமாட்டார்கள். ஜாலியாக பள்ளிக்கு செல்வேன். அறுவை சிகிச்சையின் மூலம் தன் கன்னம் சரியானது மகிழ்ச்சி அளிப்பதாக கூறிய டான்யா சிகிச்சை அளிக்க உதவிய முதலமைச்சருக்கு நன்றி எனவும் தெரிவித்தார். நான் பள்ளிக்கு சென்று நன்றாக படித்து முதலமைச்சரின் நம்பிக்கையை காப்பாற்றுவேன் என்றும் கூறினார்.