#Breaking:அதிமுக பொதுக்குழு கூட்டம்:2,300 பேர் ஆதரவு – ஈபிஎஸ் தரப்பு!
அதிமுக பொதுக்குழு கூட்டம் ஜூன் 23 ஆம் தேதி நடைபெறவுள்ளது.இந்த வேளையில்,அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சனை வெடித்துள்ள நிலையில்,அசாதாரண சூழலைக் கருத்தில் கொண்டு பொதுக்குழு கூட்டத்தை ஒத்தி வைக்குமாறு பெரும்பாலானோர் கேட்டுக் கொண்டுள்ளதாக கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் தெரிவித்திருந்தார்.மேலும்,பொதுக்குழு கூட்டத்தை தள்ளி வைக்குமாறு கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அவர்களும் ஈபிஎஸ் அவர்களுக்கு கடிதம் அனுப்பியிருந்தார்.
இந்நிலையில்,திட்டமிட்டப்படி,நாளை மறுநாள் பொதுக்குழு கூட்டத்தை நடத்துமாறு 2,300-க்கும் அதிகமான பொதுக்குழு உறுப்பினர்கள் கடிதம் அனுப்பியுள்ளதாக இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் தரப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.குறிப்பாக,திட்டமிட்டப்படி பொதுக்குழுவை நடத்த வேண்டும் என்றும்,அதில் நிச்சயம் கலந்து கொள்வோம் என்றும் கூறி எழுத்துப் பூர்வமாக கையெழுத்திட்டு 2,300-க்கும் அதிகமான பொதுக்குழு உறுப்பினர்கள் கடிதம் எழுதி தங்களது மாவட்ட செயலாளர்கள் மூலமாக ஈபிஎஸ் அவர்களிடம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனால்,நாளை மறுநாள் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்றும்,அதில் ஒற்றை தலைமை பிரச்சனைக்கு தீர்வாக தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே,அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க கோரி தொடரப்பட்ட வழக்கில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பதிலளிக்க சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.உட்கட்சி தேர்தலுக்கு எதிரான வழக்கு நிலுவையில் இருப்பதால் பொதுக்குழுவை நடத்த கூடாது என ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த அதிமுக பிரமுகர் சி.பாலகிருஷ்ணன் தொடர்ந்த மனுவுக்கு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டு,வழக்கை 22-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.