#Breaking:மாசு கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் தற்கொலை வழக்கு -சிபிசிஐடிக்கு மாற்றம்
சென்னை:மாசு கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் வெங்கடாசலத்தின் தற்கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.
மாசுக்கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் வெங்கடாசலம், வருமானத்துக்கு அதிக்காகமாக சொத்து சேர்த்ததாக கடந்த அக்டோபர் 24 ஆம் தேதி அவரது வீடு உள்ளிட்ட அவருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த சோதனையில் 13 லட்சத்து 50 ஆயிரம் ரொக்கப் பணமும், 11 கிலோ தங்கமும்,சந்தன மரத்தில் இருந்து செய்யப்பட்ட பொருட்கள், 4 கிலோ வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை லஞ்ச ஒழிப்புத்துறை கைப்பற்றியதாக கூறப்பட்டது. சந்தன கட்டைகளால் ஆன பொருட்கள் கைப்பற்றப்பட்டதால் நடவடிக்கைகளை மேற்கொள்ள வனத்துறையினருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.சட்டவிரோதமாக சந்தன மரக்கட்டங்களை வைத்திருந்ததாக தமிழ்நாடு வன பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு போடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து,கடந்த டிச.2 ஆம் தேதி சென்னை வேளச்சேரியில் உள்ள அவரது வீட்டில் வெங்கடாசலம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.இது தொடர்பாக வேளச்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்து அவரது தற்கொலைக்கான உண்மையான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.அதன்படி,அவரது செல்போன் தடயவியல் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.மேலும்,வெங்கடாசலம் மரணம் குறித்து சிபிஐ விசாரணை தேவை என்று அதிமுகவினர் வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில்,வெங்கடாசலம் தற்கொலை வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து தமிழக டிஜிபி சைலேந்திர பாபு அவர்கள் உத்தரவிட்டுள்ளார். வேளச்சேரி போலீசார் இந்த வழக்கை விசாரித்து வந்த நிலையில்,தற்போது சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.