#Breaking:”பட்டாசு ஆலை வெடி விபத்து;உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம்”- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!
சென்னை:விருதுநகர் மாவட்டத்தில் நடந்த வெடி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் மற்றும் வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் மற்றும் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே ஏழாயிரப்பண்ணை பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் இன்று காலை ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.மஞ்சள் ஓடைப்பட்டி விபத்தில் ஆலை உரிமையாளர் கருப்புசாமி,செந்தில்குமார் உட்பட 3 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. வெடி விபத்தில் காயமடைந்த 4 தொழிலாளர்களுக்கு சாத்தூர் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஏற்கனவே,சிவகாசி களத்தூரில் ஜனவரி 1-ஆம் தேதி பட்டாசு ஆலையில் நிகழ்ந்த விபத்தில் 5 தொழிலாளர்கள் இறந்த நிலையில்,இன்று ஏழாயிரப்பண்ணை பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில்,பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் மற்றும் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இது தொடர்பான,அறிவிப்பில் முதல்வர் கூறியிருப்பதாவது:
“விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை வட்டம், வையம்பட்டி கிராமத்திலுள்ள பட்டாசு தொழிற்சாலையில் நடந்த வெடி விபத்தில் மூன்று நபர்கள் உயிரிழந்த செய்தி கேட்டு மிகவும் வருத்தமடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு நிவாரணமாக தலா ரூபாய் 3 லட்சமும்,காயமடைந்தவர்களுக்கு தலா ரூபாய் 1 லட்சமும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து உடனடியாக வழங்கிட உத்தரவிட்டுள்ளேன்”,என்று தெரிவித்துள்ளார்.