#BREAKING: பட்டாசு ஆலை வெடிவிபத்து – நிவாரணம் அறிவித்த முதலமைச்சர்!
விருதுநகர் பட்டாசு தொழிற்சாலை வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு, முதலமைச்சர் ஆறுதல் கூறி நிவாரண உதவிகளை அறிவித்தார்.
விருதுநகர் அருகே நாட்டார் மங்கலம் பகுதியில் செல்வகுமார் என்பவருக்கு சொந்தமான பொம்மி பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. பட்டாசு தயாரிக்கும் பணிகள் முடிந்த பிறகு, மீதம் உள்ள கழிவுகளை எரிக்கும் பணியில் ஆறுமுகம், தெய்வேந்திரன் குபேந்திரன் ஆகிய 3 பேர் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது, திடீரென உராய்வினால் ஏற்பட்ட வெடி விபத்தில் 2 பேர் உயிரிழந்த நிலையில், இருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் பட்டாசு தொழிற்சாலை வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு, முதலமைச்சர் ஆறுதல் கூறி நிவாரண உதவிகளை அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக முதலமைச்சர் முக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், விருதுநகர், நாட்டார்மங்களம் கிராமத்தில் இயங்கி வந்த பட்டாசு தொழிற்சாலை வெடிவிபத்தில் ஆறுமுகம் மற்றும் குபேந்திரன் ஆகியோர் உயிரிழந்த துயரச் செய்தியினைக் கேட்டு மிகுந்த வருத்தமடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
மேலும், இவ்விபத்தில் காயமுற்ற தெய்வேந்திரன், கணேசபாண்டி ஆகியோருக்கு அரசு மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளேன். இந்த வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சமும், பலத்த காயமடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வரும் தெய்வேந்திரன் அவர்களுக்கு ஒரு இலட்சமும் உடனடியாக முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து நிதியுதவி வழங்கிட உத்தரவிட்டுள்ளேன் என தெரிவித்துள்ளார்.
விருதுநகர் பட்டாசு தொழிற்சாலை வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு, மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் ஆறுதல் கூறி நிவாரண உதவிகளை அறிவித்தார். pic.twitter.com/bUnWgIMDUM
— CMOTamilNadu (@CMOTamilnadu) January 30, 2022