#Breaking:பி.இ.,கலை&அறிவியியல் கல்லூரிகளில் சேர கால அவகாசம் நீட்டிப்பு – அமைச்சர் பொன்முடி அறிவிப்பு!
தமிழகத்தில் உள்ள பொறியியல்,கலை&அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.163 அரசு,கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நேற்றுடன் முடிவுற்ற நிலையில்,தற்போது அவை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக,தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் பொன்முடி கூறியதாவது:”சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், பிஇ,கலை&அறிவியல் பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கான கால அவகாசம் தேதி குறிப்பிடாமல் நீட்டிக்கப்பட்டுள்ளது.எனினும்,சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான பிறகு மாணவர்கள் விண்ணப்பிக்க 5 நாட்கள் கால அவகாசம் தரப்படும்”,என்று தெரிவித்துள்ளார்.
மேலும்,பி.இ., கலை மற்றும் அறிவியல் படிப்புகளுக்கு ஆன்லைனில் கலந்தாய்வு நடைபெறும்.கல்லூரிகளில் தரத்தை உயர்த்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும்,உயர்கல்வி மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் உதவித்தொகை திட்டத்துக்கு இதுவரை இரண்டு லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.