#BREAKING: டாக்டர் அம்பேத்கர் விருது.. பரிசுத்தொகை ரூ.5 லட்சமாக உயர்வு.. பேரவையில் அறிவிப்பு!
தோடர், இருளர் மேம்பாட்டுக்காக ரூ.40 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் விளக்க குறிப்பில் தகவல்,
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் 2022-23ம் ஆண்டிற்கான ஆதிதிராவிடர் நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அப்போது, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை கொள்கை விளக்க குறிப்பு வாசிக்கப்பட்டதில், டாக்டர் அம்பேத்கர் விருதுக்கான பரிசுத்தொகை ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அம்பேத்கரை போற்றும் வகையில் தமிழகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் சமூக, கல்வி, பொருளாதார மேம்பாட்டிற்கும் அவர்களது வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கும் தொண்டாற்றிய ஒருவருக்கு இவ்விருது 1995-ஆம் ஆண்டிலிருந்து, ஆண்டுதோறும் திருவள்ளுவர் தினத்தன்று முதலமைச்சரால் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், தற்போது டாக்டர் அம்பேத்கர் விருது பரிசுத் தொகையை ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், அந்த கொள்கை விளக்க குறிப்பில், அழிவின் விளிம்பில் உள்ள பழங்குடிகளாக வகைப்படுத்தப்பட்டுள்ள தோடர், இருளர் மேம்பாட்டுக்காக ரூ.40 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர் குடியிருப்புகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த 2022–23-ஆம் நிதி ஆண்டில் ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பழங்குடியினர் குடியிருப்புகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த ரூ.175 கோடி நிதியும், பழங்குடியினர் வாழும் உட்புறப் பகுதிகளில் பள்ளிகள் துவங்க முன்வரும் அரசு சாரா தொண்டு நிறுவனங்களுக்கு நிதியுதவி வழங்கும் வகையில் ரூ.14.50 கோடி நிதியும் மற்றும் கல்வி சார்ந்த திட்டங்களுக்காக மட்டும் ரூ.3,571.39 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கொள்கை விளக்க குறிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.