#BREAKING: அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக சுப்புலட்சுமி ஜெகதீசன் அறிக்கை.!
அரசியலில் இருந்து ஓய்வுபெற வேண்டும் என்பது எனது நீண்ட நாள் விருப்பம் என சுப்புலட்சுமி ஜெகதீசன் அறிக்கை.
திமுக துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பை சுப்புலட்சுமி ஜெகதீசன் ராஜினமா செய்துவிட்டதாக நேற்று தகவல் வெளியாகியிருந்தது. திமுக மீது அதிருப்தியால் இந்த முடிவு எடுத்துள்ளதாகவும், கணவர் ஜெகதீசன் திமுக தலைமையை கடுமையாக விமர்சித்து கருத்து பதிவிட்டு வரும் நிலையில், சுப்புலட்சுமி ஜெகதீசன் தனது பதவியை ராஜினமா செய்துவிட்டதாகவும் தகவல் வெளியாகியிருந்தது.
இந்த நிலையில், திமுக துணைப்பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் கட்சியில் இருந்து விலகினார். திமுக துணை பொதுச்செயலாளர் பதவி, கட்சியில் இருந்து ஆகஸ்ட் 29-ஆம் தேதியே விலகி விட்டதாக சுப்புலட்சுமி ஜெகதீசன் விலகல் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 2009ஆம் ஆண்டிற்கு பிறகு இனி தேர்தலில் போட்டியிடாமல் கட்சி பணிகளை மட்டுமே மேற்கொள்வதாக முன்னாள் முதல்வர் கருணாநிதியிடமே தெரிவித்திருந்தேன்.
தலைவர் கலைஞர் மறைவுக்குப்பின், அவர்களின் விருப்பத்தின்படி ஸ்டாலினை முதலமைச்சர் ஆக்கும் நோக்கத்துடன் கழகப் பணிகளை மட்டும் செய்து வந்தேன். 2021 சட்டமன்ற பொதுத் தேர்தலில் கழகம் மகத்தான வெற்றி பெற்று, தலைவர் தளபதி முக ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்று, அரசுப் பணிகளையும், கட்சிப் பணிகளையும் நாடே பாராட்டும் வகையில் சிறப்பாகச் செயல்படுத்திக் கொண்டிருக்கிறார். இது எனக்கு மிகுந்த மனநிறைவைத் தருகிறது.
இந்த நிறைவோடு அரசியலிலிருந்து ஓய்வு பெற வேண்டும் என்ற எனது நீண்ட நாள் விருப்பத்தின் அடிப்படையில் ஆகஸ்டு மாதம் 29ஆம் தேதியன்று பதிவியிலிருந்தும், கட்சியிலிருந்தும் விலகுவதாக எனது விலகல் கடிதத்தை தலைவர் முக ஸ்டாலின் அவர்களுக்கு அனுப்பிவிட்டேன் என தெரிவித்துள்ளார். 2021 சட்டமன்ற தேர்தலில் மொடக்குறிச்சியில் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் பாஜக வேட்பாளரிடம் தோற்றிருந்தார் சுப்புலட்சுமி. திமுகவில் துணை பொதுச்செயலாளர் பதவியில் மகளிர் பிரதிநித்துவம் என்ற அடிப்படையில் சுப்புலட்சுமி ஜெகதீசன் நீண்ட காலமாக இருந்து வந்த நிலையில், தற்போது விலகுவதாக அறிவித்துள்ளார்.