#BREAKING: 21 மாநகராட்சி மேயர் தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி!
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த 19-ஆம் தேதி நடைபெற்ற நிலையில், இதற்கான வாக்கு எண்ணிக்கை கடந்த 22-ஆம் தேதி நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் பெரும்பாலான இடங்களில் அமோக வெற்றி பெற்றது. இந்த வெற்றியை தொடர்ந்து கவுன்சிலர்கள் அனைவரும் நேற்று முன்தினம் பதவி ஏற்றுக் கொண்டனர். இதனைத்தொடர்ந்து மாநகராட்சி மேயர், துணை மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர் மற்றும் துணை தலைவர் ஆகிய பதவிகளுக்கு இன்று மறைமுகத் தேர்தல் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள 21 மாநகராட்சி மேயர் தேர்தலில் திமுக கூட்டணி மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது. 20 மாநகராட்சிகளில் திமுக வேட்பாளர்களும், கும்பகோணம் மாநகராட்சியில் காங்கிரஸ் வேட்பாளரும் வெற்றி பெற்றுள்ளனர். வெற்றி பெற்றுள்ள மாநகராட்சி மேயர்கள் பதவி ஏற்று வருகின்றன. சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, கும்பகோணம் உள்ளிட்ட 16 மாநகராட்சிகளில் மேயர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட நிலையில், நாகர்கோவில், ஓசூர், கடலூர், காஞ்சிபுரம் மற்றும் தஞ்சை ஆகிய மாநகராட்சிகளுக்கு மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் நடைபெற்றதால் பரபரப்பான சூழல் நிலவியது.
நாகர்கோவிலில் திமுக, பாஜக இடையே நடந்த பலப்பரீட்சையில் திமுகவின் மகேஷ் வெற்றி பெற்றுள்ளார். ஓசூர், தஞ்சை மாநகராட்சியில் திமுக, அதிமுக இடையே போட்டி நிலவி வந்த நிலையில், திமுக வேட்பாளர்களே வெற்றி பெற்றனர். இதுபோன்று காஞ்சிபுரம், கடலூரில் திமுகவின் அதிகாரபூர்வ மேயர் வேட்பாளர்களை எதிர்த்து அதிருப்தியாளர்கள் போட்டியிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும், திமுக வேட்பாளர்களான காஞ்சிபுரம் மகாலட்சுமி, கடலூர் சுந்தரி ராஜா வெற்றி பெற்றனர்.
தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகளில் வெற்றி மற்றும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட மேயர்கள்:
- சென்னையை பொருத்தவரை தி.ரு.விக நகர் 21-வது வார்டில் போட்டியிட்டு வெற்றிபெற்ற பிரியா சென்னை மாநகராட்சி மேயராக இன்று பொறுப்பேற்றுள்ளார்.
- ஆவடி மாநகராட்சியின் முதல் மேயராக திமுகவின் உதயகுமார் போட்டியின்றி தேர்வானார்.
- மதுரை மாநகராட்சி மேயராக திமுகவின் இந்திராணி போட்டியின்றி தேர்வானார்.
- தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் மறைமுக தேர்தலில் திமுக வேட்பாளர் ராமநாதன் வெற்றி.
- திருச்சி மாநகராட்சி மேயராக திமுகவின் அன்பழகன் போட்டியின்றி தேர்வானார்.
- வேலூர் மாநகராட்சி மேயராக சுஜாதா போட்டியின்றி தேர்வானார்.
- தூத்துக்குடி மாநகராட்சி மேயராக திமுகவின் ஜெகன் போட்டியின்றி தேர்வானார்.
- திண்டுக்கல் மாநகராட்சியின் முதல் பெண் மேயரானார் இளமதி.
- சேலம் மாநகராட்சி மேயராக திமுகவின் இராமச்சந்திரன் போட்டியின்றி தேர்வானார்.
- கடலூர் மாநகராட்சி மேயர் தேர்தலில் திமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் சுந்தரி வெற்றி.
- நாகர்கோவில் மாநகராட்சி மேயர் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட வழக்கறிஞர் மகேஷ் வெற்றி .
- திருப்பூர் மாநகராட்சி மேயராக திமுகவின் தினேஷ்குமார் போட்டியின்றி தேர்வானார்.
- சிவகாசி மாநகராட்சி மேயரானார் சங்கீதா இன்பம்.
- ஓசூர் மாநகராட்சி மேயர் தேர்தலில் திமுக வேட்பாளர் சத்யா வெற்றி பெற்றார்.
- நெல்லை மேயராக சரவணன், வேலூர் மேயராக சுஜாதா, கரூர் மேயராக கவிதா கணேசன், கோவை மேயராக கல்பனா, ஈரோடு மேயராக நாகரத்தினம், காஞ்சிபுரம் மேயராக மகாலட்சுமி, கும்பகோணம் மேயராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சரவணன் ஆகியோர் தேர்வாகியுள்ளனர்.