#Breaking:கரையை கடக்க தொடங்கிய தாழ்வு மண்டலம்;சென்னைக்கான ரெட் அலர்ட் நீக்கம்!
சென்னை:குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையைக் கடக்க துவங்கியதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் இருந்து தென்கிழக்கு திசையில் 30 கிமீ தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது என்றும்,இன்னும் சற்று நேரத்தில் தாழ்வு மண்டலம் கரையைக் கடக்கத் தொடங்கும் என்றும் முன்னதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதனால்,பொதுமக்கள் வீடுகளுக்கு உள்ளேயே இருக்குமாறும்,வெளியே செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டனர்.
இந்நிலையில்,குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையைக் கடக்க துவங்கியதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேலும்,இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:
“காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்க தொடங்கியது.கடந்த 6 மணி நேரத்தில் இது 16 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது.அடுத்த 2 மணி நேரத்திற்கு இந்த நிகழ்வு தொடரும்.
காற்றழுத்த மண்டலம் காரணமாக அதிக கனமழை இருக்காது,ஆனால் கனமழை தொடரும்.எனவே,சென்னைக்கு விடுக்கப்பட்ட அதிக கனமழைக்கான ரெட் அலர்ட் திரும்ப பெறப்படுகிறது”,என்று தெரிவித்துள்ளார்.
மேலும்,தாழ்வு மண்டலம் தற்போது கரையை கடக்கத் தொடங்கியதால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் தரைக்காற்று பலமாக வீசக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.