#Breaking:அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்- வானிலை ஆய்வு மைய இயக்குனர் அறிவிப்பு!
தமிழகத்தில் இன்று முதல் மார்ச் 6 ஆம் தேதி வரை மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். மேலும்,காற்றழுத்த தாழ்வு மண்டலம் வட தமிழக கடலோரப் பகுதிகளை நோக்கி நகரும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது:
“வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது.அதன்படி,தென் மேற்கு வங்கக்கடல் பகுதியில் நாகப்பட்டினத்துக்கு தென் கிழக்கே சுமார் 760 கிமீ தொலைவில் நிலை கொண்டுள்ளது.இதனையடுத்து, அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்.மேலும்,அடுத்த 48 மணி நேரத்தில் இலங்கையின் கிழக்கு கடற்பகுதி வழியாக வட தமிழக கடற்பகுதியை நோக்கி வடமேற்கு திசையில் நகரும்.
இதன்காரணமாக,கடலோர தமிழகம்,புதுவை,காரைக்கால் ஆகிய பகுதிகளில் இன்று மிதமான மழை,நாளை டெல்டா மாவட்டங்கள் கடலூர்,புதுக்கோட்டை,விழுப்புரம்,செங்கல்பட்டு,புதுச்சேரி,காரைக்கால் ஆகிய பகுதிகளில் கனமழை மற்றும் மார்ச் 5,6 ஆகிய தேதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.எனினும், அதிக கனமழைக்கான ரெட் அலர்ட் விளக்கிக் கொள்ளப்படுகிறது”, என்று பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
மேலும்,தமிழக கடலோரப் பகுதி,மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் இன்று,நாளை,நாளை மறுநாள் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும் இடைஇடையே மணிக்கு 60 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
மேலும்,தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்திலும் இடைஇடையே மணிக்கு 65 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என வேண்டாம் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.