#Breaking:விசாரணைக் கைதி மரணம்;குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதி – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!
சென்னை புரசைவாக்கம்,கெல்லீஸ் சிக்னல் அருகே கடந்த வாரம் காவல் துறையினர் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது,ஆட்டோவில் சென்று கொண்டிருந்த திருவல்லிக்கேணியை சேர்ந்த சுரேஷ் மற்றும் பட்டினப்பாக்கம் சீனிவாசபுரத்தைச் சேர்ந்த விக்னேஷ் ஆகியோரிடம் கஞ்சா மற்றும் கத்தி இருந்ததாக கூறி காவல்துறையால் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.இதனையடுத்து காவல்துறை விசாரணையில் விக்னேஷ் என்பவர் உயிரிழந்தாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
அதிமுக கவன ஈர்ப்பு தீர்மானம்:
இதனைத் தொடர்ந்து,இந்த சூழலில்,சென்னையில் விசாரணைக் கைதி விக்னேஷ் மரணம் தொடர்பாக அதிமுக சார்பில் ஈபிஎஸ் தமிழக சட்டப் பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.அப்போது, காவல்துறை தரப்பில் விக்னேஷ் குடும்பத்துக்கு ஒரு லட்சம் கொடுக்கப்பட்டது என்ற குற்றச்சாட்டை முன்வைத்த ஈபிஎஸ் அவர்கள், சிபிசிஐடி விசாரித்து வரும் இவ்வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
கொலை வழக்கு – முதல்வர் விளக்கம்:
இதனையடுத்து,இது தொடர்பாக விளக்கம் அளித்த முதல்வர்:”கஞ்சா போதையில் இருந்த விக்னேஷ்,காவல்துறை விசாரணைக்கு வர மறுத்தார்,மேலும்,கத்தியால் போலீசாரை தாக்க முயன்றுள்ளார்.இதனால்,அவர் கைது செய்யப்பட்டார்.பின்னர் விக்னேஷ்,சுரேஷ் குறித்து காவல்துறை தரவுகளில் விவரம் சேகரித்தபோது அவர்கள் மீது ஏற்கனவே கொலை,கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் உள்ளன என்பது தெரிய வந்தது.
சந்தேக மரணம்:
அடுத்த நாள் காலை இருவருக்கும் உணவு வழங்கப்பட்டது. ஆனால்,அதனை சாப்பிட்ட பின் விக்னேஷ்க்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்ட நிலையில் மருத்துவமனைக்கு போலீசார் அழைத்து சென்றனர்.ஆனால்,அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.இதனையடுத்து,இறப்பு குறித்து சந்தேக மரணம் என வழக்கு பதியப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது” என்று முதல்வர் கூறினார்.
மேலும்,விசாரணைக் கைதி மரணம் தொடர்பாக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும்,குற்றம் சாட்டப்பட்ட காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் எனவும்,விக்னேஷ் மரணத்தில் உரிய நீதி கிடைக்கும் எனவும் முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளித்தார்.
ரூ.10 லட்சம் இழப்பீடு:
இந்நிலையில்,மரணம் அடைந்த விசாரணைக் கைதி விக்னேஷ் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு தரப்படும் என்றும்,விக்னேஷ் உடன் இருந்த சுரேஷ்-க்கு அரசு செலவில் உயர்சிகிச்சை வழங்கப்படும் என்றும் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.