#BREAKING: தமிழகத்தில் ஜன.31 வரை கொரோனா கட்டுப்பாடுகளை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு!
தமிழகத்தில் ஜனவரி 31-ஆம் தேதி கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளை நீட்டித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, ஏற்கனவே இதுகுறித்து முதல்வர் ஆலோசனை நடத்திய நிலையில், தமிழகம் முழுவதும், இரவு ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தது.
இதனையடுத்து, தமிழகத்தில் இன்றுடன் ஊரடங்கு கட்டுப்பாடுகள் முடிவடைய உள்ள நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் மருத்துவத்துறை அதிகாரிகளுடன் முதல்வர் முக.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். இந்த கூட்டத்தில் கொரோனா மற்றும் ஓமைக்ரான் பாதிப்பு அதிகரிப்பு காரணமாக தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.
இதனால், புதிய கட்டுப்பாடுகள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்பட்ட நிலையில், தமிழகத்தில் ஜனவரி 31-ஆம் தேதி வரை கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளை நீட்டித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, தமிழகத்தில் ஜனவரி 31-ஆம் தேதி வரை இரவுநேர ஊரடங்கு நீடிக்கப்படுகிறது. தமிழநாட்டில் ஜன.14-ஆம் தேதி முதல் 18 வரை அனைத்து வழிபாட்டு தளங்களிலும் மக்களுக்கு அனுமதி இல்லை.
பொங்கல், தைப்பூசம் நாட்களில் கோயில்களில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. வரும் 16-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதை தொடர்ந்து கூடுதல் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகைக்காக வெளியூர் செல்லும் பொதுமக்கள் நலன் கருதி பொது பேருந்துகளில் அனுமதிக்கப்பட்ட இருக்கைகளில் 75% மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும். தற்போது, ஊரடங்கு காலங்களில் தடை செய்யப்பட்ட மற்றும் அனுமதிக்கப்பட்ட இதர செயல்பாடுகள் தொடர்ந்து அமலில் இருக்கும்.