#BREAKING: ஊரடங்கு மேலும் 2 வாரம் நீட்டிப்பு.., புதிய தளர்வுகளை அறிவித்த தமிழக அரசு!!

Default Image

தமிழகத்தில் ஊரடங்கு நிறைவடைய உள்ள நிலையில், மேலும் 2 வாரங்களுக்கு நீடித்து புதிய தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் அமலில் இருக்கும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு 23-ம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில், மேலும் தளர்வுகளுடன் செப்டம்பர் 6ம் தேதி காலை 6 மணி வரை ஊரடங்கை நீட்டித்து முதலமைச்சர் முக ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்த தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கில், செப்டம்பர் 1 முதல் 9,10,11, 12 ம் வகுப்புகளுக்கு சுழற்சி முறையில் பள்ளிகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதுபோன்று வரும் 23 ஆகஸ்ட் திங்கட்கிழமை முதல் திரையரங்குகள் அனைத்தும் 50% பார்வையாளர்களுடன் இயங்க அனுமதி அளித்துள்ளது. தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்கள் 100% பணியாளர்களுடன் செயல்படலாம். செப். 1 முதல் அங்கன்வாடி மையங்கள் மதிய உணவு வழங்குவதற்காக செயல்பட அனுமதி. அங்கன்வாடி பணியாளர்கள் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும்.

கடற்கரைகளுக்கு பொதுமக்கள் செல்ல அனுமதி என்றும் கடற்கரையில் அமைந்துள்ள கடைகளின் பணியாளர்கள், சிறு வியாபாரிகள் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 1-ஆம் தேதி முதல் டிப்ளமோ உள்ளிட்ட அனைத்து பட்டய படிப்பு கல்லூரிகள் சுழற்சி முறையில் நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மழலையர் வகுப்புகள், 1 முதல் 8 வரை உள்ள வகுப்புகளை 15ம் தேதிக்கு பிறகு திறப்பது குறித்து ஆலோசனை செய்து அறிவிக்கப்படும்.

உயிரியியல் பூங்காக்கள், தாவரவியல் பூங்காக்கள், படகு இல்லங்கள் ஆகியவை நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும். இதுவரை இரவு 09.00 மணி வரை அனுமதிக்கப்பட்ட அனைத்து கடைகள் மற்றும் செயல்பாடுகளும் வரும் 23 லிருந்து இரவு 10.00 மணி வரை, நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களுக்கு பொது பேருந்து போக்குவரத்து நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி இயக்க அனுமதிக்கப்படும். நீச்சல் குளங்கள் விளையாட்டு பயிற்சிகளுக்காக மட்டும் 50% பயிற்சியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும். பயிற்சியாளர்கள் மற்றும் 18 வயதுக்கு மேற்பட்ட பயிற்சி பெறுபவர்கள் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும்.

தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம், மகளிர் மேம்பாட்டு கழகம் மூலம் நடத்தப்படும் வேலைவாய்ப்பு பயிற்சிகளுக்கு அனுமதி என்றும் தங்கும் விடுதிகள் மற்றும் கேளிக்கை விடுதிகளில் மதுக்கூடங்கள் செயல்பட அனுமதி வழங்கப்படும் என்றும் தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்