#BREAKING : ‘நீதிமன்றம் என்.எல்.சி-க்கு மட்டுமல்ல’ – என்எல்சி வளாகத்தில் பாதுகாப்பை உறுதி செய்க..! – சென்னை உயர்நீதிமன்றம்
என்எல்சி நிறுவனத்தின் ஒப்பந்த ஊழியர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்யக்கோரியும், பணி நிரந்தரம் செய்யும் வரை மாதம் ரூ.50 ஆயிரம் ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
என்எல்சி நிர்வாகம் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்களிடையே நடைபெறும் பிரச்சனையை தீர்க்க உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ராமசுப்பிரமணியத்தை நியமிக்க சென்னை உயர் நீதிமன்றம் முடிவு செய்திருந்தது. இதுகுறித்து, என்எல்சி நிர்வாகம் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் என இருதரப்பும் கலந்து ஆலோசித்து ஆகஸ்ட் 11-ல் முடிவை தெரிவிக்க வேண்டும் என சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.
இந்த நிலையில், இந்த வழக்கு இன்று நீதிபதி தண்டபாணி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, இது தொடர் போராட்டமாக இருக்கிறது. மேலும், என்எல்சி வளாகத்தில் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று நீதிபதி தெரிவித்திருந்த நிலையில், நீதிமன்ற உத்தரவிற்கு பின் போராட்டக்காரர்கள் அனுமதிக்கப்படாத இடத்தில போராட்டம் நடத்தினார்களா? என கேள்வி எழுப்பினார்.
அதற்கு என்எல்சி நிர்வாகத்தின் தரப்பில், சிலர் அனுமதிக்கப்படாத இடத்தில் போராட்டம் நடத்தியதாக கூறியுள்ளனர்.இதனையடுத்து அனுமதிக்கப்படாத இடத்தில் போராட்டம் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இதுகுறித்த விவரங்களை போலிஸாருக்கு அனுப்புமாறு தெரிவித்தார்.
நீதிமன்றம் என்.எல்.சி-க்கு மட்டுமல்ல, தொழிலாளர்களுக்கும் தான், நெய்வேலியில் நிலக்கரி தீர்ந்துவிட்டால், நிலம் கொடுத்த தொழிலாளர்கள் குடும்பங்கள் மீண்டும் விவசாயத்துக்கு திரும்ப தயங்க மாட்டார்கள் என தெரிவித்துள்ளார். மேலும், இரு தரப்பினருக்கும் இடையே மத்தியஸ்தர் நியமனத்திற்கு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலார்களின் அனுமதி மட்டும் போதாது. என்எல்சி நிர்வாகத்தின் அனுமதியும் இருந்தால் தான் முடிவு எடுக்க முடியும். எனவே இது சம்பந்தமாக ஆகஸ்ட் 22-ஆம் தேதி என்எல்சி நிர்வாகம் மற்றும் மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.