கொரோனா.. தேவையற்ற அச்சம் வேண்டாம் – முதலமைச்சர்
தற்போது தமிழ்நாட்டில் உள்ள கொரோனா தொற்று XBB வகையாகும் என்று சென்னை நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் உரை.
புதிய வகை கொரோனா குறித்து பொதுமக்கள் தேவையற்ற அச்சப்பட வேண்டாம் என முதலமைச்சர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். புதிய வகை கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின், இன்று காலை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் பல்வேறு உத்தரவு மற்றும் அறிவுரைகளை வழங்கியுள்ளார்.
இந்த நிலையில், இதுதொடர்பாக தமிழக அரசு தற்போது வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கொரோனா பரவலால் மக்கள் அச்சப்பட வேண்டாம். மக்களை பாதுகாக்க அரசு தயார் நிலையில் உள்ளது. பொது இடங்களில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் கடைபிடிப்பதை உறுதி செய்ய வேண்டும்.
அரசு மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கு உரிய படுக்கை வசதிகள் போதுமான அளவில் உள்ளது. தற்போது தமிழ்நாட்டில் உள்ள கொரோனா தொற்று XBB வகையாகும். BF7 வகை கொரோனா தொற்று BA5 இன் உள்வகையாகும். BA5 கொரோனா தொற்று ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் தமிழகத்தில் கண்டறியப்பட்டு, தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
பொதுமக்களுக்கு அறிகுறி இருந்தால் சோதனை செய்ய வேண்டும், வெளி நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு அறிகுறி இருந்தால் சோதனையில் ஈடுபடுத்த வேண்டும். தொற்று உள்ளவர்களுக்கு முழு மரபணு வரிசைப்படுத்தல் பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் சர்வதேச விமான நிலையங்களில் கொரோனா பரிசோதனை மற்றும் சிகிச்சை அளிப்பதை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.