#BREAKING: RSS அணிவகுப்பு ஊர்வலத்துக்கு நிபந்தனை விதிப்பு.. மீறினால் கடும் நடவடிக்கை!
ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலம் விதிக்கப்பட்ட நிபந்தனைகளில் ஏதேனும் ஒன்றை மீறினாலும் காவல்துறை நடவடிக்கை எடுக்கலாம்.
தமிழ்நாட்டில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலம் நடத்துவதற்கு நிபந்தனையுடன் சென்னை உயர்நீதிமன்றம் கடந்த இரு தினங்களுக்கு முன்பு அனுமதி வழங்கியிருந்தது. ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி கோரிய வழக்கில் தமிழக அரசு, காவல்துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், நிபந்தையுடன் அனுமதி வழங்கப்பட்டது. ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்புக்கு செப்.28-ஆம் தேதிக்குள் தமிழ்நாடு காவல்துறை அனுமதி வழங்க வேண்டும் என்றும் ஆணையிட்டிருந்தது.
மேலும், ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்துக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கபட்டதை தொடர்ந்து, நிபந்தனைகள் குறித்து விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. அக்டோபர் 2-ஆம் தேதி காந்தி ஜெயந்தி அன்று தமிழகம் முழுவதும் 51 இடங்களில் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் அவர்களது உடை அணிந்து, ஊர்வலம் செல்வதற்கு திட்டமிட்டுள்ளனர். இந்த நிலையில், ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது.
இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டைக் குலைக்கும் எந்தச் செயலிலும் ஈடுபடக் கூடாது. அணிவகுப்பு ஊர்வலத்தில் பங்கேற்கும் எவரும் சாதி, மதம் பற்றி தவறாக பேசக் கூடாது. அனுமதிக்கப்பட்ட பாதையில் இடதுபுறமாக மட்டுமே அணிவகுப்பை நடத்த வேண்டும். பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்த கூடாது. காயத்தை ஏற்படுத்தக்கூடிய கம்பு, லத்தி அல்லது ஆயுதம் எதையும் கொண்டு செல்லக்கூடாது. நிபந்தனைகளில் ஏதேனும் ஒன்றை மீறினாலும் காவல்துறை நடவடிக்கை எடுக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, நீதிமன்றம் அறிவுறுத்தலின்படி ஆர்.எஸ்.எஸ் பேரணி தொடர்பான நடவடிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கொள்வார் என்று சென்னையில் அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டியளித்திருந்தார். இதுபோன்று, பள்ளிகளில் ஆர்.எஸ்.எஸ் வகுப்புகளுக்கு அனுமதியில்லை என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு குறித்து நீதிமன்ற தீர்ப்பு தெளிவாக உள்ளது என்றும் கூறியுள்ளார். இறையாண்மையை பாதிக்கக்கூடாது என நீதிமன்ற எச்சரிக்கை விடுத்துள்ளதுஎன்றும் தெரிவித்தார்.