#BREAKING :கோவை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் பணியிட மாற்றம் .!
தமிழகத்தில் கொரோனாவால் அதிகம் பாதிக்கபட்ட சென்னைக்கு அடுத்த இடத்தில் கோவை தான் உள்ளது. கோவையில் கொரோனா பாதித்தவர்களுக்கு சிங்காநல்லூரில் உள்ள இ.எஸ்.மருத்துவமனை மற்றும் சில தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை கொடுக்கப்பட்டு வருகிறது.
கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் படித்துவரும் பயிற்சி மருத்துவர்கள் பலர் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளித்து வருகின்றனர். அப்படி சிகிச்சையளித்து வந்த இரண்டு மருத்துவர்களுக்குக் கொரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவர்களுக்காக இயங்கி வந்த கேன்டீன் முன் அறிவிப்புமின்றி மூடப்பட்டது.இதனால் விடுதியில் தங்கியுள்ள மருத்துவர்கள் உணவு கிடைக்காமல் தவித்தனர். இதுதொடர்பாக மாணவர்கள் மருத்துவமனை டீனுக்கு மனு கொடுத்தனர்.
இதுகுறித்து, மருத்துவர்கள் கூறுகையில் , ஊரடங்கு உத்தரவால் நாங்கள் வெளியில் எங்கும் போக முடியவில்லை. கேன்டீனில் இருந்த உணவைத்தான் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். இரண்டு மருத்துவர்களுக்குக் கொரோனா பாதிக்கப்பட்டதால் கேன்டீனைத் திடீரென்று மூடிவிட்டனர். இங்கு 600 பேர் இருக்கிறோம். எங்களுக்குத் தரமான உணவு, தண்ணீர் கொடுங்கள் என டீன் அறை முன்பு போராட்டம் நடத்தினோம்.
மருத்துவமனை நிர்வாகம் எங்கள் கோரிக்கைகளை கேட்கவில்லை என தெரிவித்தனர்.இந்நிலையில் கோவை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் அசோகன் பணியிட மாற்றம் செய்து சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் உத்தரவு பிறப்பித்தார்.