BREAKING: பிரதமரிடம் ரூ.1000 கோடி கூடுதல் நிதி ஒதுக்க முதல்வர் கோரிக்கை.!
தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து உடனடியாக தமிழகத்திற்கு கூடுதலாக ஆயிரம் கோடி நிதி ஒதுக்க வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்தியா முழுவதும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதனால் இந்தியாவில் இன்று வரை 7447 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 643 பேர் குணமடைந்துள்ளதாகவும் , 239 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த கொரோனா தொற்று சமூக பரவலாக மாறாமல் இருக்க 21 நாள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு தற்போது அமலில் உள்ளது.இந்நிலையில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பல மாநில முதல்வர்கள் நோய் பரவலை தடுக்க ஊரடங்கு நீட்டிக்கப்பட வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
இந்நிலையில் இன்று அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி காணொளி மூலம் ஆலோசனை மேற்கொண்டார்.இந்த காணொளி ஆலோசனை கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி , தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து உடனடியாக தமிழகத்திற்கு கூடுதலாக ஆயிரம் கோடி நிதி ஒதுக்க வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
பருப்பு , மசாலா பொருட்கள் போன்றவை மாநிலங்களுக்கு இடையே லாரிகள் மூலம் விநியோகிக்கப்பட வேண்டும் என்றும் முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.