#BREAKING: முதல்வர் வீடு முற்றுகை – ஏ.பி.வி.பி. அமைப்பினர் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி!
முதலமைச்சரின் வீட்டை முற்றுகையிட்டதற்காக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி ஏ.பி.வி.பி. அமைப்பினர் மனு தள்ளுபடி.
சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டை முற்றுகையிட்டதற்காக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி ஏ.பி.வி.பி. அமைப்பினர் தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம். இதுபோன்ற போராட்டங்களை ஊக்குவிக்க முடியாது எனக்கூறி உயர்நீதிமன்ற நீதிபதி இளந்திரையன் மனுவை தள்ளுபடி செய்தார். கடந்த பிப்ரவரி 14-ஆம் தேதி முதலமைச்சர் இல்லத்தை பாஜகவின் மாணவர் அணியான ஏ.பி.வி.பி. அமைப்பினர் முற்றுகையிட்டனர். தஞ்சை மாணவி மரணத்திற்கு நீதி கேட்டு போராடிய ஏ.பி.வி.பி. அமைப்பினர் 35 பேர் மீது தேனாம்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர்.
போராட்டத்தை தடுத்த காவல்துறையினரை ஏபிவிபி அமைப்பினர் தாக்கியதாக காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி புகார் அளித்திருந்தார். காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி புகாரின் அடிப்படையில் ஏபிவிபி அமைப்பை சேர்ந்த 35 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. வழக்கை ரத்து செய்யக்கோரி ஏபிவிபி அமைப்பை சேர்ந்த கவுசிக், உகேந்திரன் உள்ளிட்ட 31 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இந்த நிலையில், முதலமைச்சரின் வீட்டை முற்றுகையிட்டதற்காக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி ஏபிவிபி அமைப்பினர் மனு தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.