#BREAKING : நீட் விலக்கு மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்புமாறு ஆளுநரிடம் முதல்வர் வலியுறுத்தல்..!

Default Image

நீட் தேர்வு தொடர்பாக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்ட முன்வடிவை குடியரசு தலைவர் ஒப்புதலுக்கு உடனடியாக அனுப்ப வேண்டும் என்று ஆளுநரிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களை,சென்னை, கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தற்போது சந்தித்து பேசினார். அவரிடம், மழை வெல்ல பாதிப்பு குறித்து பேசியுள்ளார்.

அதனை தொடர்ந்து, நீட் தேர்வு தொடர்பாக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்ட முன்வடிவை குடியரசு தலைவர் ஒப்புதலுக்கு உடனடியாக அனுப்ப வேண்டும் என்று ஆளுநரிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், ‘மருத்துவ மாணவர் சேர்க்கையில் நீட் தேர்வு முறையானது ஏழை எளிய கிராமப்புற மாணவர்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளதா என்பது குறித்தும், அவ்வாறு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை களையும் வகையில் அனைவருக்கும் பயனளிக்கக்கூடிய நியாயமான மாணவர் சேர்க்கை முறையை நடைமுறைப்படுத்துவது குறித்தும் ஆராய்ந்து, தக்க பரிந்துரைகளை அளித்திட மாண்புமிகு நீதியரசர் ஏ.கே ராஜன் அவர்களின் தலைமையில் குழு ஒன்றை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அமைத்தார்கள்

இக்குழுவானது நீட் தேர்வு பற்றி பல்வேறு தரப்பினரின் கருத்துக்களைக் கேட்டறிந்தும் மாணவர் சேர்க்கை பற்றிய தகவல்களைத் தீர ஆராய்ந்தும் சமுதாயத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள மாணவர்களுக்கு நீட் தேர்வால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை விளக்கி, இந்த பாதிப்புகளை அகற்றிட மாற்று மாணவர் சேர்க்கை முறையை நடைமுறைப்படுத்துவது குறித்து தனது பரிந்துரைகளை அரசுக்கு அளித்தது.

இந்தக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் 13.9 2021 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் ‘தமிழ்நாடு இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கை சட்ட முன்வடிவு” நிறைவேற்றப்பட்டது இச்சட்ட முன்வடிவிற்கு மாண்புமிகு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற மாண்புமிகு ஆளுநர் அவர்களுக்கு அனுப்பப்பட்டது

மருத்துவ மாணவர் சேர்க்கையில் தமிழ்நாட்டிற்கு ஏற்பட்டுள்ள பாதிப்பின் தனித்தன்மையை கருத்தில் கொண்டு, மாண்புமிகு குடியரசுத் தலைவரின் ஒப்புதலை விரைவில் பெறும் பொருட்டு தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்ட முன்வடிவை உடனடியாக மாண்புமிகு குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று மாண்புமிகு ஆளுநர் அவர்களை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இன்று (27.11.2021) நேரில் சந்தித்து வலியுறுத்தினார். இச்சந்திப்பின் போது மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சர் அவர்கள், மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அவர்கள் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்