#BREAKING: சிறப்பு ஊட்டச்சத்து திட்டத்தை துவக்கி வைத்தார் முதலமைச்சர்!
ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு சிறப்பு திட்டம் தொடக்கம்.
ஊட்டியில் சத்து குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு சிறப்பு ஊட்டச்சத்து தரும் திட்டத்தை முதலமைச்சர் முக ஸ்டாலின் துவக்கி வைத்தார். கோவை மற்றும் உதகை மாவட்டங்களில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துக் கொள்வதற்காக முதலமைச்சர் முக ஸ்டாலின் அங்கு சென்றுள்ளார். இதுபோன்று நேற்றைய தினம் உதகையில் 124-ஆவது மலர் கண்காட்சியை துவக்கி வைத்த அவர், இன்றும் பல்வேறு அரசு நலத்திட்டங்களை தொடக்கி வைக்கிறார்.
அதில் ஒரு பகுதியாக, நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள குழந்தைகள் மையத்தில், குழந்தைகளுக்கான சிறப்பு பரிசோதனை முகாமை தொடக்கி வைத்தார். நடந்து முடிந்த சட்டப்பேரவையில், 110-ன் விதியின் கீழ் வெளியிடப்பட்ட அறிவிப்பில், ஊட்டச்சத்து குறைபாட்டை களைய 6 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்றும் 6 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் எனவும் முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
அதனடிப்படையில், இன்று ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு ஊட்டச்சத்தை உறுதி செய்யும் சிறப்பு திட்டத்தை முதலமைச்சர் தொடக்கி வைத்துள்ளார். 6 வயதுக்கு உட்பட குழந்தைகள் கடுமையான மற்றும் மிதமான ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு சிறப்பு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டும், மருத்துவ உதவி, ஊட்டச்சத்து தேவைப்படும் குழந்தைகளை தனித்தனியாக பிரித்தும் குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாட்டை நீக்க நடவடிக்கை மேற்கொள்வதே இந்த திட்டத்தின் சிறப்பாகும்.