#BREAKING: கல்லூரி மாணவிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்!
அரசுப் பள்ளிகளில் படித்து கல்லூரிகளில் பயிலும் மாணவியருக்கு ரூ.1,000 வழங்கும் புதுமைப் பெண் திட்டம் தொடக்கம்.
அரசு பள்ளியில் படித்து உயர்கல்வி சேர்ந்த மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் முக ஸ்டாலின் தொடங்கி வைத்தார். புதுமைப்பெண் என்ற பெயரிலான திட்டத்தை சென்னை ராயபுரம் பாரதி மகளிர் கல்லூரியில் பயனடைய உள்ள மாணவிகளுக்கு புதுமைப்பெண் என்று அச்சிடப்பட்ட டெபிட் கார்டுகளை முதலமைச்சர் வழங்கினார். 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசுப்பள்ளியில் படித்து உயர்கல்விக்காக கல்லூரியில் சேர்ந்த மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும்.
புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் சுமார் 6 லட்சம் மாணவிகள் ஆண்டுதோறும் பயன்பெறுவார்கள். புதிய முன்முயற்சிக்காக வரவு செலவு திட்டத்தில் ரூ.698 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாணவிகள் ஏற்கனவே பிற கல்வி உதவித்தொகை பெற்று வந்தாலும் இந்த திட்டத்தில் கூடுதலாக உதவி பெறலாம். முதற்கட்டமாக சுமார் ஒரு லட்சம் மாணவிகளுக்கு வங்கி கணக்கில் மாதம் ரூ.1000 நேரடியாக வரவு வைக்கப்படும். மேலும், 26 தகைசால் பள்ளிகள், 15 மாதிரிப் பள்ளிகளும் துவக்கப்பட்டன. இந்த நிகழ்வில் டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் பங்கேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.