#BREAKING: தர்மம், நீதி வென்றுள்ளது – ஈபிஎஸ்
அதிமுக சட்டவிதிப்படி ஜூலை 11-ல் நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் செல்லும் என்ற தீர்ப்பை வரவேற்கிறேன் என ஈபிஎஸ் அறிக்கை.
ஜூலை 11-ல் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என்ற தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்து, அதிமுக பொதுக்குழு செல்லும் என்றும் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. பொதுக்குழு கூட்டம் செல்லும் என்பதால், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என தெரிவிக்கப்பட்டது.
அதிமுக பொதுக்குழு செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் என தனது ட்விட்டர் முகப்பு பக்கத்தில் இபிஎஸ் குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், உண்மை உறங்கும் நேரம், பொய்மை இறக்கை கட்டி வாயு வேகத்தில் உலாவரும் என்று சொல்லுவார்கள். அதிமுக தொண்டர்களையும், தீய சக்தி, விடியா திமுக அரசின் அராஜகத்தில் இருந்து தமிழக மக்களையும் காக்கும் அறப்போரில் முழுமனதோடு ஈடுபட்டு வருகிறோம்.
இந்த அரும் பணிகளுக்குத் தடையாக, உடனிருந்தே கொல்லும் வியாதிகளாக, நம் இயக்கத்தால் வாழ்வு பெற்ற ஒருசில சுயநல விஷமிகள், திமுக-விற்கு ஆதரவாக செயல்பட்டு வந்தனர். இவர்களின் கெடுமதிகளை முறியடிக்க, தூய்மையான மனதுடன் நீதி, நேர்மை, நாணயத்தை நம்பி, கழகத் தொண்டர்களின் முழு ஆதரவுடன் போராடி வருகிறோம். இன்றைய தினம் தர்மம், நீதி வென்றுள்ளது.
ஜூன் 23 அன்று நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லும் என்றும், அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் செல்லும் என்றும், 11.7.2022 அன்று கழக சட்ட விதிகளின்படி நடைபெற்ற சிறப்பு கழகப் பொதுக்குழு கூட்டம் செல்லும் என்றும், அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களும், அறிவிப்புகளும், முடிவுகளும் செல்லும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் இன்று வழங்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பினை மிகுந்த மன மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன். இந்த சட்டப் போராட்டத்தில் என்னோடு துணை நின்ற நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட ஒவ்வொருவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
மாண்புமிகு கழக இடைக்காலப் பொது செயலாளர் திரு. @EPSTamilNadu அவர்களின் அறிக்கை. pic.twitter.com/gSQDOdAy1t
— AIADMK (@AIADMKOfficial) September 2, 2022