#Breaking: தமிழில் குடமுழுக்கு நடத்தக் கோரிய வழக்கில் நாளை காலை தீர்ப்பு.!
- தஞ்சை பெரிய கோயிலில் தமிழில் குடமுழுக்கு நடத்த கோரி மணியரசன், திருமுருகன் உள்ளிட்ட பலர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தொடரப்பட்ட வழக்கு நாளை காலை தீர்ப்பு.
- குடமுழுக்கை தமிழ், சமஸ்கிருதம் என இரண்டிலும் நடத்த இந்து அறநிலைத்துறை முடிவு.
தஞ்சை பெரிய கோவில் உரிமைக் கழக ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன், நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்நாதன், உள்ளிட்ட பலர் தஞ்சை பெரிய கோவிலில் குடமுழுக்கு விழாவை தமிழில் நடத்த உத்தரவிட வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்குகளைத் தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது குடமுழுக்கு நிகழ்வை ஆகம விதிப்படி தமிழிலும், சமஸ்கிருதத்திலும் நடத்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக இந்துசமய அறநிலையத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அதனை பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். இந்த வழக்கு நீதிபதிகள் துரைசுவாமி, ரவீந்திரன் அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில், ஆகமம் என்பது தமிழ் மொழிக்கானது என்றும், சமஸ்கிருதத்தில் அதற்கான பொருள் இல்லை என்றும் வாதிடப்பட்டது.
இந்நிலையில், தஞ்சை பெரிய கோயிலில் தமிழ் மற்றும் சமஸ்கிருத மொழியில் குடமுழுக்கு விழா நடத்தப்படும் என இந்து சமய அறநிலையத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை நீதிபதிகள் ஒத்திவைத்தனர். தற்போது தமிழில் குடமுழுக்கு நடத்த கோரி மணியரசன், திருமுருகன் உள்ளிட்ட பலர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தொடரப்பட்ட வழக்கு நாளை காலை தீர்ப்பு என உயர்நிதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும், தஞ்சை பெரிய கோயிலில் குடமுழுக்கை தமிழ், சமஸ்கிருதம் என இரண்டிலும் நடத்த அறநிலைத்துறை முடிவு செய்ததாகவும், கோயிலில் கருவறை உள்ளிட்ட எல்லா பகுதியிலும் சம்ஸ்கிருதத்துக்கு இணையாக தமிழுக்கு முக்கியத்துவம் தரப்படும் என்று இந்து அறநிலைத்துறை அறிவித்துள்ளது.