#Breaking: உடல் அங்கே, உள்ளம் இங்கே! வீட்டில் இருந்தே பதவியேற்பை காணுங்கள் – மு.க.ஸ்டாலின்

Default Image

தமிழகத்தின் முதல்வரானாலும் உங்கள் முன்னிலையில் பதவி ஏற்க முடியவில்லையே என்ற கவலை உள்ளது என முக ஸ்டாலின் உருக்கம்.

தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக தனி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளதை தொடர்ந்து, நாளை காலை  9 மணிக்கு ஆளுநர் மாளிகையில் திமுக தலைவர் முக ஸ்டாலின் முதல்வர் பதவியேற்கவுள்ளார். கொரோனா பரவல் காரணமாக மிகக் குறைந்த அளவிலான நபர்கள் தான் இந்த விழாவில் அனுமதிக்கப்படுகின்றனர்.

இதனைத்தொடர்ந்து, மு.க.ஸ்டாலின், தலைமை செயலகத்துக்கு சென்று அவரது அறையில் முதல் கையெழுத்திட உள்ளார். அதற்காக பொதுப்பணி துறையினர், முதல்வரின் அறையின் பெயர்பலகைகள் மாற்றப்பட்டு, வர்ணம் பூசப்பட்டு, மிகவும் சிறப்பான முறையில், தயார் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், கொரோனா காலம் என்பதால் எளிமையான முறையில் நடைபெறும் பதவியேற்பு விழாவை திமுகவினர் வீட்டில் இருந்தே கண்டுகளிக்க வேண்டுகிறேன் என்று முக ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், திமுக மீது நம்பிக்கை மகத்தான தீர்ப்பை வழங்கி இருக்கிறார்கள். ஆறாவது முறையாக திமுக ஆட்சி அமைக்கயிருக்கிறது. உடன்பிறப்புகள் அயராத உழைப்பால் இந்த வெற்றி கிட்டியது.

உடல்நலம் முக்கியம் என்பதால் பதவியேற்பு விழாவுக்கு நேரில் வருவதை தவிர்க்க வேண்டும் என்று தொண்டர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். கொரோனா பெருந்தொற்று பேரலையாக வீசுவதால் மக்கள் கூடும் மாபெரும் விழா நடத்த இயலாது. அதனால் தான் எளிமையாக பதவியேற்பு விழா நடத்த வேண்டியுள்ளது. திமுகவின் வெற்றிக்காக உழைத்த தொண்டர்கள் முன்னிலையில் பதவியேற்க முடியவில்லை என்பது எனக்கும் கவலை அளிக்கிறது.

கட்சி தொண்டர்கள் இருக்கும் திசை நோக்கி வணங்கி முதல்வராக பதவியேற்க தயாராகி வருகிறேன். மக்கள் அனைவரும் சம உரிமையும், கடமையும் உடைய உயர்வான தமிழகத்தை உருவாக்கிடுவோம். மேலும், எளிய விழாவினை வீடுகளில் இருந்தே கண்டுகளியுங்கள், உடல் அங்கே என்றாலும் உங்கள் உள்ளம் சென்னையில்தான் என்பதை அறிவேன் என குறிப்பிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்