#BREAKING : ‘தென்பெண்ணையில் தடுப்பணை’ – நடுவர் மன்றம் மூலம் தீர்வு காணப்படும் : அமைச்சர் துரைமுருகன்

Default Image

கர்நாடகா அணை கட்டும் விவகாரத்தில் நடுவர் மன்றத்தின் மூலம் தீர்வு காணப்படும் என தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

தென்பெண்ணை ஆற்றின் கிளை நதியான மார்க்கண்டேய நதியில்,  தமிழக அரசின் அனுமதி இல்லாமல்,  கர்நாடகா அரசு அணை காட்டியிருப்பது தமிழக விவசாயிகள் மத்தியில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சார்பில் ஒரு அறிக்கை வெளியாகியுள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், 02.07.2021 அன்று சில நாளேடுகளில் மார்கண்டேய நதியின் குறுக்கே கர்நாடக அரசு அணைக் கட்டியுள்ளது பற்றி செய்திகள் வெளியாகியுள்ளன. மார்கண்டேய நதி கர்நாடகத்தில் உற்பத்தியாகி தமிழ்நாட்டில் பெண்ணையாற்றில் கலக்கும் ஒரு சிறு கிளை நதியாகும்.

2017-இல் மத்திய நீர்வள குழுமத்தின் பொறியாளர்கள் ஆய்வு செய்தபோது கர்நாடக அரசு அப்பகுதியில் குடிநீர் தேவைக்காகவும் நிலநீரை செரிவூட்டுவதற்காகவும் சுமார் 0.5 டி.எம்.சி கொள்ளலவுள்ள ஒரு அணையை கட்டியிருப்பதாகவும் தெரிவித்துள்ளது. 2019-இல் இந்த அணை அநேகமாக கட்டிமுடிந்துவிட்டதாக கர்நாடக அரசு தெரிவித்துள்ளது. கர்நாடகாவின் இச்செயலை தமிழ்நாடு அரசு தொடர்ந்து எதிர்த்து வந்துள்ளது. உச்சநீதிமன்றத்தில் 18.5.2018-இல் ஒரு அசல் வழக்கும், ஒரு இடைக்கால மனுவும் தாக்கல் செய்ததன் பேரில் உச்சநீதிமன்றம் 14.11.2019 அன்று அளித்த தீர்ப்பில் இப்பிரச்சனைக்கு தீர்வு காண ஒரு நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்று ஆணையிட்டது. இந்த நடுவர் மன்றத்தை அமைக்க தமிழ்நாடு அரசு தொடர்ந்து ஒன்றிய அரசை வலியுறுத்தி வந்துள்ளது.

29.6.2021 அன்று தமிழ்நாடு அரசு மத்திய ஜல் சக்தி அமைச்சகத்துக்கு அனுப்பிய கடிதத்திலும் நடுவர் மன்றத்தை விரைவில் அமைக்க வலியுறுத்தியுள்ளது. இந்த அணையினால் தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி தாலுக்காவில் மார்கண்டேய நதியின் குறுக்கே நான்கு சிறு அணைகளினால் புஞ்சை பாசன வசதி பெறும் சுமார் 870 ஹெக்டேர் பாதிக்கப்படும். தமிழ்நாடு அரசு விரைவில் நடுவர் மன்றத்தை அமைக்க தொடர்ந்து நடுவன் அரசை வலியுறுத்தும். நடுவர் மன்றத்தின் மூலம் இப்பிரச்சனைக்கு தீர்வு காணப்படும். மார்கண்டேய நதியினை சார்ந்துள்ள விவசாயிகள் மற்றும் பொது மக்களின் நலனை பாதுகாக்கவும் தமிழ்நாட்டின் உரிமைகளை நிலைநாட்டவும் தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும். இவ்வாறு மாண்புமிகு நீர்வளத் துறை அமைச்சர் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்