#Breaking:மத்திய அமைச்சர் அமித்ஷாவை வரவேற்று பேனர் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் புதுச்சேரியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனி விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார்.அவரை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மற்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் வரவேற்றனர்.
இதனைத் தொடர்ந்து,ஆவடியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை புதுச்சேரி சென்று அங்கு மத்திய பல்கலைக்கழகத்தில் நடைபெறும் அரவிந்தரின் 150 வது பிறந்த நாள் விழாவில் அமித்ஷா பங்கேற்றார்.இதனையடுத்து,அரவிந்தர் ஆசிரமம்,மகாகவி பாரதியார் வாழ்ந்த இல்லம் ஆகியவற்றை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பார்வையிட்டார்.
அதே சமயம்,புதுச்சேரியில் கிழக்கு கடற்கரை சாலையில் ரூ.70 கோடி மதிப்பில் புதிய பேருந்து நிலையம் அமைக்க அடிக்கல் நாட்டிய அமித்ஷா புதுச்சேரியில் புதிதாக நியமிக்கப்பட்ட காவலர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.இதனிடையே,மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் வருகைக்காக புதுச்சேரியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதனிடையே,புதுச்சேரியில் மத்திய அமைச்சர் அமித்ஷாவை வரவேற்று பாஜக சார்பில் வைக்கப்பட்ட அலங்கார வளைவு சரிந்து விழுந்து 70 வயது மூதாட்டி ராஜம்மாள் என்பவர் காயம் அடைந்ததாகவும்,போக்குவரத்துக்கு இடையூறாக பேனர்கள் வைக்கப்பட்டுள்ளதாக வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டியதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில்,புதுச்சேரிக்கு வருகை புரிந்த மத்திய அமைச்சர் அமித்ஷாவை வரவேற்று சட்டவிரோதமாக வைக்கப்பட்டிருக்கும் பேனர்களை உடனே அகற்றி,சட்டவிரோதமாக பேனர்கள் வைத்தவர்களிடமே,அதை அகற்றியதற்கான செலவை வசூலிக்க வேண்டும் என புதுச்சேரி நகராட்சிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.