#BREAKING: செந்தில் பாலாஜிக்கு அனுப்பிய சம்மனுக்கு தடை – உயர் நீதிமன்றம் உத்தரவு
அமைச்சர் செந்தில் பாலாஜி உள்பட 3 பேருக்கு அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனுக்கு இடைக்கால தடை விதிப்பு.
சட்டவிரோத பணப்பரிமாற்றம் வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. அமைச்சர் செந்தில் பாலாஜி உள்பட 3 பேருக்கு அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. வழக்கில் குற்றச்சாட்டப்பட்ட சண்முகம் 9-ஆம் தேதியும், செந்தில் பாலாஜி 13-ஆம் தேதியும் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது.
அமலாக்கத்துறை சம்மனை எதிர்த்து சண்முகம் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. இதனிடையே, கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்துறை அமைச்சராக இருந்த தற்போதைய அமைச்சர் செந்தில் பாலாஜி, போக்குவரத்துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுதொடர்பாக அளிக்கப்பட்ட 3 புகாரிகளின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.
தமிழக காவல்துறை பதிவு செய்யப்பட்ட வழக்கு விசாரணையில், சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறி செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் மற்றும் நண்பர் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதன் மத்திய குற்றப்பிரிவு வழக்கின் அடிப்படையில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் வழக்கை அமலாக்கத்துறை பதிவு செய்திருந்தது. இந்த வழக்கு விசாரணைக்கு 3 பேரும் வெவ்வேறு தேதிகளில் ஆஜராகுமாறு அமலாக்கத்துறை ஏற்கனவே சம்மன் அனுப்பியிருந்தது.
இதனைத்தொடர்ந்து, அமலாக்கத்துறை சம்மனை எதிர்த்து சண்முகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். அவரது மனுவில், ஆவணங்களை தங்களுக்கு வழங்காமல் சம்மன் அனுப்பியது தவறு என்றும் இதனால் சம்மன் தொடர்பான அனைத்தையும் ரத்து செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்திருந்த நிலையில், அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.