#BREAKING : தருமபுர ஆதின பட்ட பிரவேசத்திற்கு தடை நீக்கம் – மயிலாடுதுறை கோட்டாட்சியர்
தருமபுரம் ஆதீனத்தில் பாரம்பரியமாக நடைபெறும் பட்டினப்பிரவேச விழாவில் ஆதீனத்தை பல்லக்கில் தூக்கிச் செல்ல விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி மயிலாடுதுறை கோட்டாட்சியர் உத்தரவு
மயிலாடுதுறை மாவட்டம் தருமபுரம் ஆதீனத்தில் பாரம்பரியமாக நடைபெறும் பட்டினப்பிரவேச விழாவில் ஆதீனத்தை பல்லக்கில் தூக்கிச் செல்ல தடை விதித்து, மயிலாடுதுறை கோட்டாட்சியர் பாலாஜி உத்தரவிட்டிருந்தார். இதற்கு பாஜக,பாமக மற்றும் அதிமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தன.
மேலும், தனது உயிரே போனாலும் பரவாயில்லை என்றும் தானே சென்று தருமபுர ஆதீன பல்லக்கை சுமப்பதாகவும் மதுரை ஆதீனம் தெரிவித்தார். மேலும், அண்மையில் தமிழக ஆளுநர் தருமபுர ஆதீன மடத்துக்கு சென்றதே தருமபுர ஆதீனத்தை பல்லக்கில் தூக்கி செல்ல தடை விதிக்க காரணம் எனவும் மதுரை ஆதீனம் கூறியிருந்தார்.
இதனையடுத்து, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தருமபுரம் ஆதீன பட்டணப் பிரவேச நிகழ்வில் விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, தருமபுரம் ஆதீன பட்டணப் பிரவேசம் குறித்து விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும் என்று உறுதியளித்திருந்தார்.
இந்த நிலையில், தருமபுரம் ஆதீனத்தில் பாரம்பரியமாக நடைபெறும் பட்டினப்பிரவேச விழாவில் ஆதீனத்தை பல்லக்கில் தூக்கிச் செல்ல விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி மயிலாடுதுறை கோட்டாட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனை தொடர்ந்து வரும் 22- ஆம் தேதி, பட்டண பிரவேசம் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.