#BREAKING: அதிமுகவின் 2ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!
பாஜகவுடன் கூட்டணி முறிந்த நிலையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான அதிமுகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அதிமுகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி, சேலம் , ஆவடி, திருச்சி, மதுரை, சிவகாசி, தூத்துக்குடி ஆகிய மாநகராட்சிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அதிமுக வெளியிட்டுள்ளது. இதுபோன்று, தேனி, சேலம், செங்கல்பட்டு, திருவள்ளூர், திருவண்ணாமலை மாவட்ட நகராட்சி வேட்பாளர் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், கிருஷ்ணகிரி, ஈரோடு, திருச்சி, அரியலூர், நாகை, மயிலாடுதுறை மாவட்ட நகராட்சி வேட்பாளர் பட்டியலையும் அதிமுக வெளியிட்டுள்ளது.
மதுரை, விருதுநகர்,, சிவகங்கை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட நகராட்சி வேட்பாளர் பட்டியலும் வெளியானது. ஏற்கனவே, கடலூர், தருமபுரி மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிட்டிருந்த நிலையில், தற்போது 2ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது.
இதனிடையே, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான இடப்பங்கீட்டில் அதிமுக – பாஜக இடையே உடன்பாடு ஏற்படாமல், தொடர்ந்து இழுபறி நீடித்து வந்த நிலையில், தமிழகத்தில் வரும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனித்துப் போட்டியிடுவதாக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்திருந்தார். அதிமுக தலைமை மீது எந்த வருத்தமும் இல்லை என்றும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டி என்றாலும், தேசிய ஜனநாயக கூட்டணி என்பது தொடர்ந்து நீடிக்கும் என்றும் கூறியிருந்தார்.
இந்த நிலையில் கூட்டணியிலிருந்து பாஜக வெளியேறியதால் நகராட்சி, மாநகராட்சி வேட்பாளர்கள் பட்டியலையும் அதிமுக வெளியிட்டது. இதுபோன்று ராணிப்பேட்டை மாவட்டத்தில் 8 பேரூராட்சிகளுக்கான அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியாகியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.