#BREAKING: அதிமுக பொதுக்குழு தீர்மான வழக்கு ஒத்திவைப்பு!
அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை அங்கீகரிக்கக்கூடாது என்று உத்தரவிடக்கோரிய வழக்கு 2 வாரங்களுக்கு ஒத்திவைப்பு.
ஜூலை 11 அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு ஒப்புதல் தரக்கூடாது என உத்தரவிட கோரிய வழக்கு இன்று விசாரணைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. தீர்மானங்களுக்கு ஒப்புதல் தரக்கூடாது என்று தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட கோரி சூர்யமூர்த்தி என்பவர் வழக்கு தொடுத்திருந்தார். சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி துரைசாமி, நீதிபதி சுந்தர் மோகன் அமர்வு இன்று விசாரிப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதன் நிலையில், ஜூலை 11 அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை அங்கீகரிக்கக்கூடாது என்று உத்தரவிடக்கோரி தொடர்ந்த வழக்கு 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தது சென்னை உயர் நீதிமன்றம்.
அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளராக ஈபிஎஸ் தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுக்குழு தீர்மானங்களை அங்கீகரிக்க கூடாது என தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி திண்டுக்கல் மாவட்டம் களத்துப்பட்டியை சேர்ந்த அதிமுக உறுப்பினர் எஸ்.சூரியமூர்த்தி என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார். இரட்டை தலைமையை ஒழித்து ஒற்றை தலைமையை உருவாக்க நிறைவேற்றிய தீர்மானங்களை ரத்து செய்ய மனுதாரர் கோரிக்கை வைத்துள்ளார். இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வான எடப்பாடி பழனிசாமி கட்சியில் புதிய முடிவுகளை எடுக்க தடை விதிக்க வேண்டும் என்றும் மனுவில் தெரிவித்துள்ளார்.
எனவே, எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த உயர் நீதிமன்ற தீர்ப்பு நகலை படித்துப் பார்க்க மனுதாரரான அதிமுகவின் சூர்யமூர்த்தி அவகாசம் கோரியதை அடுத்து, இபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட தீர்ப்பு நகலை படித்து பார்த்து விளக்கமளிக்க மனுதாரருக்கு அவகாசம் வழங்கி, இதுதொடர்பான வழக்கு விசாரணையை இரு வாரங்களுக்கு ஒத்திவைப்பதாக பொறுப்பு தலைமை நீதிபதி துரைசாமி, நீதிபதி சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு தெரிவித்துள்ளது.