#Breaking:பட்டியலின மக்கள் குறித்து அவதூறு பேச்சு;நடிகை மீரா மிதுன் கைது.
பட்டியலின மக்கள் குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் நடிகை மீரா மிதுன் கைது செய்யப்பட்டுள்ளார்.
சமூக வலைத்தளத்தில் தன்னைப் பற்றி அனைவரும் அதிகமாக பேச வேண்டும் என்பதற்காகவே சர்ச்சை கருத்துக்களை அவ்வப்போது பேசி வரும் நடிகை மீரா மிதுன்,கடந்த சில தினங்களுக்கு முன்பு பட்டியலின மக்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு அளித்த புகாரை அடுத்து நடிகை மீது வன்கொடுமை தடுப்பு சட்டம்,கலகம் செய்ய தூண்டி விடுதல்,சாதி மதம் மற்றும் இனம் தொடர்பாக விரோத உணர்ச்சியை தூண்டிவிடுதல்,பொதுமக்களின் அமைதியை குலைக்கும் வகையில் பயமுறுத்துதல்,அச்சம் ஏற்படுத்துதல்,பொதுமக்களிடையே தவறான தகவல்களை பரப்பி தீங்கு விளைவித்தல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இதனையடுத்து,நடிகை மீரா மிதுன் நேரில் ஆஜராக வேண்டும் என்று அவருக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் இரு தினங்களுக்கு முன்னர் சம்மன் அனுப்பினர்.
ஆனால்,தன்னை கைது செய்வது கனவில் தான் நடக்கும்;காந்தி, நேரு எல்லாம் சிறைக்கு போகவில்லையா? என்று நடிகை மீரா மிதுன் பேசிய வீடியோ வெளியிட்டார்.
இதனையடுத்து,அவரது செல்போன் சிக்னல் வைத்து தேடும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டனர்.இந்நிலையில்,நடிகை மீரா மிதுனை கேரளாவில் மத்திய குற்றப்பிரிவு தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.அவரை சென்னை கொண்டுவரும் சட்ட ரீதியான முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.