#BREAKING: ஆதார் இணைப்புக்கு இனி அவகாசம் இல்லை – அமைச்சர் அறிவிப்பு
இனி மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க அவகாசம் நீட்டிக்கப்படாது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு.
மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க இன்றுடன் அவகாசம் நிறைவடைய உள்ள நிலையில், அவகாசம் நீட்டிக்கப்படாது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு.
ஆதார் எண் இணைப்பு:
கடந்த ஆண்டு தமிழக அரசு ஆதார் எண்ணை, மின் இணைப்புடன் இணைக்க வேண்டும் என்று அறிவித்திருந்தது. அதன்படி, மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி நவம்பர் 15-ஆம் தேதி முதல் தொடங்கியது. இதற்காக சிறப்பு முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு இப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில், ஆதார் இணைப்புக்கு கால அவகாசம் மூன்று முறை நீடிக்கப்பட்டுள்ளது.
அவகாசம் இன்றுடன் நிறைவு:
இதுவரை 99% மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்துள்ள நிலையில், மின்வாரிய வாரியம் வழங்கிய கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது. இதனால், இதுவரை ஆதார் எண்ணை மின் இணைப்புடன் இணைக்காதவர்கள் இணைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. ஆதாரை இணைக்காதவர்கள், இனி இணையம் வாயிலாக மின் கட்டணம் செலுத்த முடியாத சூழல் உருவாகும் என கூறப்படுகிறது. மேலும் ஆதார் இணைப்புக்கு மீண்டும் அவகாசம் நீட்டிக்கப்படுமா என்பது குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்தன.
இனி அவகாசம் இல்லை:
இந்த நிலையில், கரூரில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க மேலும் கால அவகாசம் நீட்டிக்கப்படாது என்று அறிவித்துள்ளார். இன்றுடன் அவகாசம் நிறைவடைய உள்ள நிலையில், ஆதார் இணைப்புக்கு இனி அவகாசம் இல்லை என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். இதுவரை 2.67 கோடி பேரில் 2.66 கோடி பேர் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர் எனவும் கூறினார்.