#BREAKING: மாநிலங்களவை உறுப்பினர்கள் 6 பேர் போட்டியின்றி தேர்வு!
மாநிலங்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் இருந்து 6 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் மாநிலங்களவை உறுப்பினருக்கு வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், திமுக சார்பில் கிரிராஜன், கல்யாணசுந்தரம், ராஜேஷ்குமார், காங்கிரஸ் சார்பில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் பா.சிதம்பரம் மற்றும் அதிமுக சார்பில் முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம், ஆர்.தர்மர் ஆகியோர் மாநிலங்களவை உறுப்பினர்களாக போட்டியின்றி தேர்வு செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வேட்புமனுக்களை திரும்ப பெறுவதற்கான நேரம் இன்று 3 மணியுடன் நிறைவடைந்த நிலையில், 6 பெரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதனிடையே, தமிழ்நாடு உட்பட 15 மாநிலங்களில் காலியாக உள்ள இடங்களுக்கு ஜூன் 10-ஆம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் முன்னதாக அறிவித்தது. அதன்படி, தமிழ்நாட்டில் 6 இடங்கள் உட்பட மாநிலங்களவை உறுப்பினர்கள் 57 பேரை தேர்வு செய்ய ஜூன் 10-ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.
இதனைத்தொடர்ந்து, மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட தமிழகத்தில் இருந்து, திமுகவில் 3, அதிமுகவில் 2, காங்கிரஸ் 1 பேர் உள்ளிட்ட வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். இவர்களின் வேட்புமனுக்களை ஏற்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடுவதற்காக தாக்கல் செய்யப்பட்ட 7 சுயேட்சை வேட்பாளர்களின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், கிரிராஜன், ராஜேஷ்குமார், கல்யாணசுந்தரம், ப.சிதம்பரம், சிவி சண்முகம், தர்மர் ஆகியோர் போட்டியின்றி தேர்வாகியுள்ளனர்.