#BREAKING: நளினி உள்பட 6 பேரும் விடுதலை – உச்சநீதிமன்றம் உத்தரவு
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நளினி உள்பட எஞ்சிய 6 பேரையும் விடுதலை செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நளினி உள்பட எஞ்சிய 6 பேரையும் விடுதலை செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே, பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்ட நிலையில், எஞ்சிய 6 பேரையும் விடுதலை செய்தது உச்சநீதிமன்றம். நளினி, ராமச்சந்திரன் மனுக்களை விசாரித்த பிஆர் காவாய் தலைமையிலான உச்சநீதிமன்றம் அமர்வு உத்தரவிட்டுள்ளது.
இதனிடையே, பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதை தொடர்ந்து, சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி தங்களையும் விடுதலை செய்யக் கோரி நளினி உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். தமிழ்நாடு அரசின் பரிந்துரையை ஏற்று அவர்களை விடுதலை செய்ய ஆளுநர் ஆர்.என்.ரவி முடிவெடுக்காத நிலையில், உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
அதன்படி, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறை தண்டனை அனுபவித்து வந்த நளினி, முருகன், சாந்தன், ஜெயக்குமார், ரவிசந்திரன், ராபர்ட் பயாஸ் ஆகிய 6 பேரும் விடுதலை செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு, பேரறிவாளனை போலவே மற்றவர்களும் நிவாரணங்களை பெற தகுதியானவர்கள் என தெரிவித்துள்ளது.
7 பேர் விடுதலை தொடர்பான அமைச்சரவை முடிவு மீது முடிவெடுக்க ஆளுநர் காலம் தாழ்த்தியதை கணக்கில் கொள்ள வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஏற்கனவே, நளினி உள்பட 6 பேர் விடுதலை தொடர்பாக உச்சநீதிமன்றம் எடுக்கும் முடிவுக்கு தமிழக அரசு ஆதரிக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
கடந்த மே மாதம் 17-ஆம் தேதி பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்ட நிலையில், இன்று மீதமுள்ள 6 பேரையும் விடுதலை செய்ய உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. நன்னடத்தை, சிறையில் கல்வி கற்றது, பரோல் விதிமுறை, ஆளுநரின் தாமதம் ஆகியவற்றின் அடிப்படையில் நளினி உள்பட 6 பேரையும் விடுதலை செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.