#BREAKING: 7 மாவட்டங்களில் 3 மணி நேரத்தில்.. தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு.. – வானிலை மையம்!
நாளை மறுநாள் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என வானிலை மையம் தகவல்.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் 7 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, நாகை, கன்னியாகுமரி, நெல்லை மற்றும் தூத்துக்குடியில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி, காரைக்கால் பகுதியில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும். இதுபோன்று மன்னார் வளைகுடா மற்றும் தமிழ்நாட்டின் உட்பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 4 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
நாளை தென் கடலோர மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என்றும் 8, 9, 10 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறியுள்ளது. சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருந்தாலும் மழைக்கு வாய்ப்பு இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.
தெற்கு அந்தமான் கடல் அதையொட்டிய வங்கக்கடல் பகுதியில் ஒரு மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். நாளை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என வானிலை மையம் கணித நிலையில், தற்போது மேலும் தாமதமாகும் என்றும் கூறியுள்ளது. நாளை மறுநாள் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என குறிப்பிட்டுள்ளது.
மேலும், ஏப்ரல் 8, 9 தேதிகளில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் பலத்த சூறாவளி வீசக்கூடும் என்றும் மணிக்கு 40 முதல் 60 கிமீ வேகத்தில் பலத்த சூறாவளி வீசக்கூடும் என்பதால் மீனவர்களுக்கு 2 நாட்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் ராமநாதபுரம், சிவகங்கை, நாகப்பட்டினம், கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. pic.twitter.com/KbDzb8MR5Q
— TN SDMA (@tnsdma) April 6, 2022