#BREAKING: வெளியானது 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்!
தமிழகத்தில் 10, 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிட்டார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் .
தமிழகத்தில் 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்திருந்தது. அதன்படி, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த மே மாதம் நடைபெற்ற 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 8.3 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதியிருந்தனர். இந்த நிலையில், 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார். சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் செய்தியாளர் சந்திப்பில் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிட்டார்.
அப்போது பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், தமிழகம், புதுச்சேரியில் 93.76% மாணவ, மாணவிகள் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சியடைந்தனர். 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய 8,06,277 பேரில் 7,55,998 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். பிளஸ் 2 தேர்வில் கடந்தாண்டை விட இந்தாண்டு தேர்ச்சி விகிதம் அதிகம் என்றும் அறிவித்தார். பிளஸ் 2 தேர்வில் மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை மாணவ, மாணவிகள் http://tnresults.nic.in, http://dge.tn.gov.in, http://dge1.tn.nic.in, http://dge2.tn.nic.in என்ற இணையதளம் வாயிலாக தெரிந்துகொள்ளலாம். பதிவு எண், பிறந்த தேதியை உள்ளீடு செய்து மதிப்பெண் விவரங்களை அறிந்துகொள்ளலாம். பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்ணிற்கு எஸ்எம்எஸ் மூலம் மதிப்பெண்கள் அனுப்பப்படும் என்றும் பள்ளிகள், நூலகங்கள் வாயிலாகவும் தேர்வு முடிவுகளை அறியலாம் என அரசு தேர்வுகள் இயக்கம் தெரிவித்துள்ளது.
இதுபோன்று தமிழகம், புதுச்சேரியில் 10-ஆம் வகுப்பில் மொத்தம் 90.7 சதவிகித மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர் எனவும் அமைச்சர் அறிவித்துள்ளார். 10-வகுப்பு பொதுத்தேர்வை 9,12,620 மாணவர்கள் எழுதிய நிலையில், 8,21,994 பேர் தேர்ச்சி பெற்றனர். இதில், மாணவிகள் 94.38%(4.27 லட்சம்), மாணவர்கள் 85.83% (3.94 லட்சம்) பேர் தேர்ச்சி பெற்றனர். 10-ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வு முடிவுகளை நண்பகல் 12 மணி முதல் இணையதளம் வாயிலாக தெரிந்து கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் ஜூன் 24 முதல் வழங்கப்படும் என்றும் அமைச்சர் அறிவித்தார். மேலும், 12-ம் வகுப்பு துணைத்தேர்வு ஜூலை 27-ல் தொடங்கும் என்றும் 10-ம் வகுப்பு துணைத்தேர்வு ஆகஸ்ட் 2-ல் தொடங்கும் எனவும் தெரிவித்தார்.