#BREAKING: கைத்தறி நெசவாளர்களுக்கு அடிப்படை கூலி 10% உயர்வு – அமைச்சர் ஆர்.காந்தி அறிவிப்பு!
சிறந்த கைத்தறி நெசவாளர் விருது வழங்கும் திட்டத்தின் பரிசுத்தொகை உயர்த்தி வழங்கப்படும் என அமைச்சர் ஆர்.காந்தி சட்ட பேரவையில் அறிவிப்பு.
இன்று நடைபெற்று வரும் தமிழக சட்டப்பேரவையில் செய்தித்துறை, பத்திரப்பதிவு துறை மற்றும் கைத்தறி நெசவாளர் துறை ஆகியவை மீது மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அப்போது, பேசிய கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, கைத்தறி நெசவாளர்களுக்கு அடிப்படை கூலி மற்றும் அகலவிலைப்படி தலா 10% உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து பேசிய அவர், கதர், பாலிவஸ்திரா ரகங்களை மக்கள் அறிந்து கொள்ள ரூ.20 லட்சம் செலவில் சமூக ஊடகங்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் விளம்பரப்படுத்தப்படும். சிறந்த கைத்தறி நெசவாளர் விருது வழங்கும் திட்டத்தின் பரிசுத்தொகை உயர்த்தி வழங்கப்படும். கைத்தறி ரகங்களின் பாரம்பரியம் மற்றும் கைத்தறினை பாதுகாக்காக ரூ.5 கோடியில் அருங்காட்சியகம் உருவாக்கப்படும்.
கைத்தறி நெசவாளர்களின் நல்வாழ்வுக்காக ஆரோக்கிய நெசவாளர் நல்வாழ்வு மற்றும் காப்பீடு திட்டம் அறிமுகப்படுத்தப்படும். 6 கூட்டுறவு நூற்பாலைகளில் பணிபுரியும் 75 நிரந்தர பணியாளர்களுக்கு ஊதிய விகிதம் மாற்றியமைக்கப்படும். திண்டுக்கல் சின்னாளபட்டியில் ரூ.6 கோடியில் சாயக்கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
மேலும், கோவையில் உள்ள தமிழ்நாடு பஞ்சாலை கழகத்தில் மருத்துவ சார்ந்த தொழில்நுட்ப ஜவுளி உற்பத்தி தொடங்கப்படும் என பேரவையில் தெரிவித்தார். இதனிடையே, புவிசார் குறியீடு சட்டத்தின் கீழ் நெகமம் சேலைகள், வீரவநல்லூர் செடிபுட்டா சேலைகள் மற்றும் உறையூர் பருத்தி சேலைகள் பதிவு செய்ய கைத்தறி துறையால் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கூறியிருந்தார்.