#BREAKING: ஆம்பூர் பிரியாணி திருவிழா ஒத்திவைப்பு!
ஆம்பூரில் அரசு சார்பில் நாளை நடைபெறவிருந்த பிரியாணி திருவிழா தற்காலிகமாக ஒத்திவைப்பு.
திருப்பூர் மாவட்ட நிர்வாக சார்பில் ஆம்பூரில் நாளை முதல் 15-ஆம் தேதி வரை மூன்று நாட்கள் பிரியாணி திருவிழா நடைபெறும் என்று அம்மாவட்ட ஆட்சியர் ஏற்கனவே அறிவித்திருந்தார். இந்த நிலையில் தற்போது சர்ச்சை எழுந்த நிலையில், ஆம்பூர் பிரியாணி திருவிழா தற்காலிகமாக ஒத்திவைப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த திருவிழாவில் மாட்டிறைச்சி பிரியாணிக்கு அனுமதி மறுக்கப்பட்டதை தொடர்ந்து, தலித், இஸ்லாமிய கூட்டமைப்புகள் மற்றும் விசிக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், மழையை காரணம் காட்டி ஆம்பூர் பிரியாணி திருவிழாவை ஒத்திவைக்கிறது திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகம். மாட்டுக்கறிக்கு தடை விதித்ததால் காலை முதல் பிரியாணி திருவிழா சர்ச்சைக்குள்ளாகி இருந்தது. இந்த பிரியாணி திருவிழாவில் மாட்டிறைச்சி பிரியாணிக்கு அனுமதி கோரி தலித் மற்றும் இஸ்லாமிய கூட்டமைப்புகள் இன்று காலை முதல் ஆம்பூர் முழுவதும் உள்ள கடைகளில், அவர்களுக்கு ஆதரவு திரட்டி நாளை பிரியாணி திருவிழா நடைபெறும் வர்த்தக மைய கட்டத்திற்கு வெளியில் இலவசமாக மாட்டிறைச்சி பிரியாணி வழங்குவதற்கான ஏற்பாடுகளில் தீவிரமாக ஈடுபட்டனர்.
புவிசார் குறியீடு மற்றும் மனித ஒருமைப்பாட்டிற்கான பிரியாணி திருவிழா என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்திருந்தது. மாட்டிறைச்சி பிரியாணியை அனைவரும் விரும்பி சாப்பிடுவது இல்லை, இதற்கான எதிர்ப்புகளும் நிறைய உள்ளது. இதற்கு அனுமதி அளித்தால் மற்றவர்கள் மற்ற இறைச்சியை சாப்பிடுவதற்காக அனுமதி கேட்பார்கள். அதனால் மட்டன் மற்றும் சிக்கன் பிரியாணிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது என மாவட்ட நிர்வாகம் கூறியிருந்தது. ஆனால், இதற்கு இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் விசிக போன்ற கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், பிரியாணி திருவிழா ஒத்திவைக்கப்பட்டுள்ளது.